உக்ரைன் போரில் ரஷியாவுக்கு தோல்வி ஏற்பட்டால்... புதினுக்கு என்ன நேரும் என முன்னாள் தூதர்
14 Mar,2023
உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷியாவுக்கு தோல்வி ஏற்பட்டால் புதினுக்கு என்ன நேரும் என்பது பற்றி முன்னாள் ரஷிய தூதர் பேட்டியளித்து உள்ளார். மாஸ்கோ, உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. கடந்த ஆண்டு பிப்ரவரியில் உக்ரைனுக்கு தனது படைகளை ரஷியா அனுப்பியதும் அதிக பாதிப்புகளை உக்ரைன் எதிர்கொள்ளும் என பலர் கணிப்பு வெளியிட்டனர். எனினும், ரஷிய வீரர்கள் பலரை வீழ்த்தி, தனது பூமியை பாதுகாப்பதில் உக்ரைன் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதனால், ரஷியாவின் வருங்காலம் பற்றி நிபுணர்கள் கணிக்க தொடங்கி விட்டனர். அதிபர் புதினின் எதிர்காலம் என்னவாகும் என்றும் யோசிக்க தொடங்கினர்.
உக்ரைன் மீது கடந்த ஆண்டு ரஷியா போரை தொடுத்ததும் ரஷியாவின் முன்னாள் தூதரான போரிஸ் பாண்டாரேவ் வெளிப்படையாக தனது பதவி விலகல் பற்றிய அறிவிப்பை வெளியிட்டார். அவர் ஜெனீவாவுக்கான ரஷியாவின் தூதரகத்தின் ஆயுத கட்டுப்பாட்டு நிபுணராக பணியாற்றினார். இந்நிலையில், உக்ரைன் போரில் ரஷியாவுக்கு தோல்வி ஏற்பட்டால் என்ன நேரும் என்பது பற்றி அவர் நியூஸ்வீக் என்ற பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், புதின் பதவியில் இருந்து மாற்றப்படுவார். அவர் ஒன்றும் சூப்பர்ஹீரோ இல்லை. அவருக்கு என்று எந்தவித சூப்பர்பவர்களும் கிடையாது.
அவர் ஒரு சாதாரண சர்வாதிகாரியே என்று கூறியுள்ளார். நாம் வரலாற்றை உற்றுநோக்கினால், இதுபோன்ற சர்வாதிகாரிகள் அவ்வப்போது பதவியில் இருந்து மாற்றப்பட்டே வந்து உள்ளனர். அதனால், வழக்கம்போல் போரில் தோல்வி ஏற்பட்டால், ஆதரவாளர்களின் தேவைகளை திருப்தியடைய செய்ய முடியாவிட்டால், அவர்கள் வெளியேறுவது வழக்கம் என்று கூறியுள்ளார். ரஷியா போரில் தோற்று போனால்,
பதிலுக்கு புதினால் நாட்டுக்கு எதுவும் திருப்பி தரமுடியாது. இனி புதின் தேவையில்லை என அவர்கள் நினைக்க தொடங்கி விடுவார்கள். மனவருத்தமும், முரண்பாடுகளும், அச்சமும் ஏற்படும் என்று அவர் கூறியுள்ளார். இதனால், அதிபர் புதின் பதவியில் இருந்து விலக வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்று பாண்டாரேவ் கூறியுள்ளார். இந்த போரானது பாக்முத் பகுதியில் தீவிரமடைந்து உள்ளது. கிழக்கே அமைந்த சிறிய நகரை பிடிக்கும் தீவிர முயற்சியில் ரஷியா ஈடுபட்டு உள்ளது. வாக்னர் எனப்படும் தனியார் கூலிப்படை அமைப்பை சேர்ந்தவர்கள் அந்நகரை சிறைபிடித்தபோதும், அதனை சுற்றி வளைக்க தவறி விட்டனர் என கூறப்படுகிறது.