எங்க ஊருக்கு டூர் வந்தா ரூ.13,600 தருவோம்.பலே அறிவிப்பை வெளியிட்ட நாடு..!
26 Feb,2023
உலகையே முடக்கிப் போட்ட கொரோனா பெருந்தொற்றில் பெரும் பாதிப்பை கண்ட துறைகளில் முதன்மையானது சுற்றுலாத் துறை. உலகின் பல்வேறு நாடுகள் சுற்றுலாவைத் தான் தங்களின் பிரதான வருவாய் ஆதாரமாக கொண்டுள்ளன. இப்படி இருக்க சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்க்கப்பட்டுள்ள நிலையில், மந்தமடைந்த சுற்றுலாத் துறையை மீட்டெடுக்க பல நாடுகள் புதிய திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றன.
அப்படித்தான் தென்கிழக்கு ஆசிய நாடான தைவான், தங்கள் நாட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2023இல் 60 லட்சம் சுற்றுலா பயணிகளை ஈர்க்க தைவான் திட்டமிட்டுள்ளது. இதற்காக சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை ஊக்குவிக்க அவர்களுக்கு சிறப்பு தொகை அல்லது ஊக்கத் தொகை வழங்கப்போவதாக தைவான் அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, தைவானுக்கு சுற்றுலா வரும் ஒவ்வொரு பயணிக்கும் தலா 165 அமெரிக்க டாலர் அதாவது ரூ.13,600 உதவித்தொகை வழங்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. மேலும், குழுவாக வரும் 90,000 பயணிகளுக்கு ஒரு குழுவுக்கு தலா 658 அமெரிக்க டாலர் உதவித்தொகை வழங்கப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு அக்டோபர் மாதம் தான் கோவிட் கட்டுப்பாடுகளை தைவான் அரசு நீக்கியது. அதைத்தொடர்ந்து 2022இல் தாய்லாந்திற்கு 9 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். வியட்நாம், இந்தோனேசியா, ஜப்பான், அமெரிக்கா அகிய நாடுகளில் இருந்து அதிக அளவிலான பயணிகள் தைவான் வந்துள்ளனர்.