புதினால் உக்ரைனை ஒருபோதும் வெல்ல முடியாது.. ஜோ பைடன் .!
24 Feb,2023
2022 பிப்ரவரி 24ஆம் தேதி ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் உக்ரைன் மீதான போர் நடவடிக்கையை தொடங்கினார். ஆரம்பத்தில் ரஷ்ய படைகள் வேகமாக முன்னேறி உக்ரைனை திணறடித்தன. இருப்பினும், அமெரிக்கா மற்றும் இதர ஐரோப்பிய நாடுகள் உதவியுடன் உக்ரைன் பதில் தாக்குதலை சிறப்பாக மேற்கொண்டு போரில் தாக்குபிடித்து வருகிறது. போர் தொடங்கி கிட்டத்தட்ட ஓராண்டு காலம் ஆகியும் முடிவுக்கு வராமல் உள்ளதால் உலக நாடுகள் கவலையில் உள்ளன.
இந்நிலையில், பிப்ரவரி 20ஆம் தேதி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைனுக்கு திடீர் பயணம் மேற்கொண்டார். உக்ரைன் அதிபர் செலன்ஸ்கியை சந்தித்து தனது ஆதரவை பைடன் வெளிப்படுத்தியுள்ளார். உக்ரைனில் ஜனநாயகம், இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை நிலைநிறுத்துவதற்கு, தனது ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்த கிவ் நகருக்கு சென்றதாக அவர் தெரிவித்தார். தொடர்ந்து மற்றொரு அண்டை நாடான போலாந்திற்கு சென்ற ஜோ பைடன், உக்ரைன் போர் குறித்து முக்கிய உரையாற்றினார்.
போலந்து தலைநகர் வார்சாவில் அவர் பேசுகையில், "பொது மக்களின் சுதந்திர தியாகத்தை ஒரு சர்வாதிகாரியால் ஒரு போதும் அழிக்க முடியாது. எந்த கொடுங்கோன்மையும் அதை தடுக்க முடியாது. உக்ரைனை ஒரு போதும் ரஷ்யாவால் வெல்ல முடியாது. ஒரு போதும் முடியாது” என்று குறிப்பிட்டார்.
மேலும், மேற்கு நாடுகள் ரஷ்யா மீது தாக்குதல் நடத்த விரும்புவதாக புதின் சொல்கிறார். அதில் உண்மை ஏதும் இல்லை. கோடிக்கணக்கான ரஷ்ய மக்கள் அமைதியான வாழ்வைத் தான் விரும்புகிறார்கள். அண்டை நாடுகளை எதிரிகளாக அவர்கள் கருதுவதில்லை. உக்ரைனுக்கான எங்கள் ஆதரவு ஒரு போதும் குறையாது. நோட்டோ அமைப்பில் எந்த பிரிவு ஏற்படாது. நாங்கள் சோர்வடைய மாட்டோம்" என்று உறுதிபட தெரிவித்துள்ளார்.