முன்னேறும் ரஷ்யப் படைகள் - ஏவுகணைத் தாக்குதல்கள் - முறியடிக்கும் உக்ரைன்!
11 Feb,2023
ரஷ்யா - உக்ரைன் யுத்தம் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் வரும் நிலையில், ரஷ்ய படைகள் தற்போது முன்னேறி வருவதாக கூறப்படுகின்றது.
இதேவேளை, உக்ரைனில் தாக்குதல்களை ரஷ்யா தீவிரப்படுத்தி வருவதுடன், மேலதிகமான படைகளையும் குவித்து வருவதாக சொல்லப்பட்டுள்ளது.
இருப்பினும், உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளதுடன், அதனை உக்ரைன் படைகள் பதில் தாக்குதல்களின் மூலம் தடுத்து நிறுத்தியுள்ளன.
ரஷ்ய படைகள் மேற்கொண்ட 71 ஏவுகணைத் தாக்குதல்களில் 61 ஏவுகணைத் தாக்குதல்களை உக்ரைனின் விமானப்படை மற்றும் தரைப்படை தாக்கி அழித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
அசோவ் கடலிலிருந்து ஈரானில் தயாரிக்கப்பட்ட "காமிகேஸ்" ட்ரோன்களையும், கருங்கடலிலிருந்து காலிபர் ஏவுகணைகளையும் கொண்டு உக்ரைன் மீது ரஷ்யா ஏவியுள்ளது.
குறித்த ஏவுகணைத் தாக்குதலின் பெரும்பகுதி முறியடிக்கப்பட்டாலும், உக்ரைனின் மின் உற்பத்தி நிலையங்களுக்கு கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், மின்சாரம் தடைப்பட்டுள்ளதாவும் உக்ரைன் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
இதேவேளை, உக்ரைனின் கார்கிவ் பகுதியில் உள்ள முக்கியமான இடங்களைக் குறிவைத்து ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகின்றது.