மகப்பேறு விடுப்பில் இருந்த பெண்ணை கணவருடன் சேர்த்து பணிநீக்கம் செய்த கூகுள் நிறுவனம்!
28 Jan,2023
அலுவலகத்தில் இருவரும் அடிக்கடி சந்திக்க முடியாவிட்டாலும், கூகுளின் ஊழியர்களுக்கான பல நிகழ்வுகளில் இருவரும் கலந்துகொண்டதாக அல்லி கூறினார்.
கூகுளில் சமீபத்திய பணிநீக்க நடவடிக்கையின்போது அந்நிறுவனத்தில் பணிபுரிந்த ஒரு தம்பதியையும் சேர்த்தே அந்நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது. இதில் பேசுபொருள் என்னவென்றால், பணிநீக்கம் செய்யப்பட்ட பெண் மகப்பேறு விடுப்பில் இருந்துள்ளார். தனது கணவரை பணிநீக்கம் செய்த கூகுள் நிறுவனம், அவரையும் சேர்த்து நீக்கியுள்ளது. இவர்களுக்கு பிறந்து நான்கு மாதங்களான பச்சிளம் குழந்தை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பள்ளி பருவத்திலிருந்து காதலித்து திருமணம் செய்துகொண்ட இந்த ஜோடி-- அல்லி மற்று ஸ்டீவ், பல ஆண்டுகளாக கூகுளில் பணியாற்றியுள்ளனர். அல்லி என்ற அந்த பெண், கூகுளில் கடந்த 6 ஆண்டுகளாக பணியாற்றியுள்ளார். மேலும், அவரது கணவர் ஸ்டீவ் கடந்த 4 ஆண்டுகளாக அந்நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், கூகுளின் முன்னாள் மார்க்கெட்டிங் மேலாளராக பணிபுரிந்த அல்லி, கடந்த 2022-ல் தனக்கு குழந்தை பிறந்தவுடன் மகப்பேறு விடுப்பில் சென்றார். அதன் பின் 8 மாதங்கள் விடுப்பு எடுக்க திட்டமிட்டிருந்தார் என கூறப்படுகிறது. மறுபுறம், ஆய்வு நடவடிக்கை மேலாளரான ஸ்டீவ், குழந்தை பிறந்ததால் 2022-ன் பிற்பகுதியில் 2 மாத விடுப்பைப் பெற்று சென்றுள்ளார்.
இந்த நிலையில்தான், இருவரும் ஒரே நேரத்தில் பணிநீக்கம் செய்யப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், மகப்பேறு விடுப்பு பாலிசிதான் நிறுவனத்துடன் பணிபுரிய அவர்களை ஊக்குவிக்கும் முக்கிய காரணியாக இருந்ததாக தெரிவித்தனர். அலுவலகத்தில் இருவரும் அடிக்கடி சந்திக்க முடியாவிட்டாலும், கூகுளின் ஊழியர்களுக்கான பல நிகழ்வுகளில் இருவரும் கலந்துகொண்டதாக அல்லி கூறினார். மேலும், இருவரின் பணிநீக்கத்தைப் பற்றி அறிந்த பிறகு பல நிறுவனங்கள் பணி வாய்ப்புகளுடன் தங்களைத் தொடர்பு கொண்டதாகவும், ஆனால் தாங்கள் தொழில்முனைவோராக இருந்ததால், 2014-ல் தொடங்கப்பட்ட அவர்களின் White Cube Media என்கிற வீடியோ தளத்தை மேலும் கட்டமைக்க இந்த சமயத்தை பயன்படுத்தப்போவதாக தெரிவித்தனர்.
கடந்த ஜனவரி 22 அன்று, கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் அதன் ஊழியர்களில் கிட்டத்தட்ட 12,000 பேரை பணிநீக்கம் செய்வதாக அறிவித்திருந்தது. இவை எல்லாவாற்றுக்கும் மேலாக, இரு தினங்களுக்கு முன்னர், கூகுளின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, அந்நிறுவனத்தின் உயர் அதிகாரிகளின் ஊதியக் குறைப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த ஆண்டு ஊதியக் குறைப்புகளைச் சந்திக்க நேரிடுவார்கள் என்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.