தென் கொரியர்கள், ஜப்பானியர்களுக்கான விசா இல்லாத இடைத்தங்கலையும் ரத்துச் செய்தது சீனா
12 Jan,2023
கொரியா மற்றும் ஜப்பானிய பிரஜைகளுக்கு விசா இல்லாத இடைத்தங்கல் (ட்ரான்சிட்) பயண வாய்ப்பை ரத்துச் செய்யப்போவதாக சீனா இன்று அறிவித்துள்ளது.
பல நாடுகளைச் சேர்ந்த பயணிகள், 3 ஆவது நாடொன்றுக்கு பயணிக்கவுள்ளதை உறுதிப்படுத்தினால் அவர்கள் 72 மணித்தியாலங்கள் விசா இல்லாமல் சீனாவில் தங்குவதற்கான வாய்ப்பை சீனா வழங்குகிறது. சிலருக்கு 144 மணித்தியாலங்கள் வரை சில மாகாணங்கள், நகரங்களில் தங்கியிருக்கவும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.
இந்நிலையில், தென் கொரியர்கள் மற்றும் ஜப்பானியர்களுக்கு, 72 அல்லது 144 மணித்தியாலங்களுக்கான விசா இல்லாத பயண இடைத்தங்கல் வாய்ப்பை உடனடியாக இடைநிறுத்துவதாக சீனாவின் தேசிய குடிவரவு நிர்வாகம் இன்று புதன்கிழமை அறிவித்துள்ளது.
சீனப் பயணிகளுக்கு தென் கொரியா கட்டுப்பாடுகளை விதி;த்தமைக்கு பதிலடியாக இத்தீர்மானத்தை சீனா மேற்கொண்டுள்ளது.
கொவிட்19 பரவல் கட்டுப்பாட்டில், பூச்சிய கொவிட் கொள்கையை கடைபிடித்த சீனா, அதை கைவிட்டுள்ளது. 3 வருடங்களின் பின் தனது எல்லையை சீனா கடந்த ஞாயிறு முதல் திறந்துவிட்டுள்ளது.
இதனால், பெரும் எண்ணிக்கையான சீன மக்கள் வெளிநாடுகளுக்கு செல்வதற்குத் தயாராகும் நிலையில், சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை பல நாடுகள் அறிவித்துள்ளன. இதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
தென் கொரியர்கள் மற்றும் சீனர்களுக்கு குறுகிய கால விசா வழங்குவதை இடைநிறுத்துவதாக நேற்று சீனா அறிவித்திருந்தது.
இந்நிலையில், மேற்படி இரு நாட்டவர்களுக்கும் விசா இல்லாத பயண இடைத்தங்கல் வாய்ப்பையும் நீக்குவதாக சீனா இன்று அறிவித்துள்ளது.
சீனாவின் புதிய தீர்மானத்துக்கு ஜப்பான் ஆட்சேபம் தெரிவித்துள்ளதுடன், இத்தீர்மானத்தை மாற்றுமாறு கோரியுள்ளது