குழந்தைகள் முதியவர்கள் பயணங்களை தவிருங்கள் சீன மக்களுக்கு அரசு எச்சரிக்கை
10 Jan,2023
கொரோனா தொற்றின் பிறப்பிடமான சீனாவில், கடந்த சில மாதங்களாக தொற்று பரவல் வேகமெடுத்துள்ளது. தலைநகர் பெய்ஜிங், ஷாங்காய் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது. அதேபோல் அத்தியாவசிய மருந்துகளின் தேவை அதிகரித்து வருவதால், பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
சீனாவில் தற்போதைய பரவலுக்கு ஒமைக்ரான் வைரஸ் தொற்றின் உருமாறிய பிஎப் 7 வகை தொற்று காரணம் என்பது தெரிய வந்துள்ளது. இந்த வகை தொற்றால், அடுத்த மூன்று மாதங்களில், சீனாவின் மக்கள் தொகையில், சுமார் 60 சதவீதம் பேர் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.
கடந்த மாதம் மட்டும் சீனாவின் மொத்த மக்கள் தொகையில் 40 சதவிகிதம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை கணக்கிடுவது சவாலான காரியமாக உள்ளதாகவும், மேலும் கொரோனா வைரஸ் பரவும் தன்மை நினைத்ததை விட வீரியமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே சீனா புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு பயணம் மேற்கொள்வதை குறைத்துக்கொள்ள வேண்டும் என மக்களை அரசு கேட்டுக்கொண்டுள்ளது. சனிக்கிழமை தொடங்கி அடுத்த மாதம் 15- ஆம் தேதி வரை சீனாவில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளன. இதற்காக சுமார் 200 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்படும் என கணிக்கப்பட்டுள்ளது. முதியவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள், உடல் நலன் பாதிக்கப்பட்டவர்கள் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என அரசு கேட்டுக்கொண்டுள்ளது.