வெளிநாட்டவர்களுக்கான தனிமைப்படுத்தலை 3 வருடங்களின்பின் நீக்குகிறது சீனா:
27 Dec,2022
விமான ஆசனங்களை முன்பதிவு செய்யும் சீனர்கள்
சீனாவுக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கான கட்டாய கொவிட்19 தனிமைப்படுத்தலை எதிர்வரும் ஜனவரி 8 ஆம் திகதி முதல் நீக்கவுள்ளதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுமார் வருடங்களின் பின்னர், வெளிநாட்டவர்களுக்கான கொவிட்19 தனிமைப்படுத்தலை சீனா நீக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொவிட் 19 தொற்றுக் கட்டுப்பாட்டுக்கான பூச்சியக் கொள்கையை (zero-Covid policy) கடைபிடித்து வந்த சீனா, படிப்படியாக அதை தளர்த்தி வருகிறது.
இதன்படி, சீனாவுக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கான கட்டாய தனிமைப்படுத்தலை எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் நீக்கவுள்ளதாக சீனா அறிவித்துள்ளது.
எனினும், சீனாவில் கொவிட் 19 கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின்னர் அங்கு கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துவரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தலைநகர் பெய்ஜிங்கில் கடந்த வாரம் தினமும் சுமார் 4000 புதிய தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியன.
இதேவேளை, வெளிநாட்டவர்களுக்கான கட்டாய தனிமைப்படுத்தல் நீக்கப்பட்டதையடுத்து, சமூக ஊடகங்களில் சீன மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். அதேவேளை, வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
வெளிநாட்டுப் பயணங்களுக்கான ரிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் நடவடிக்கைகளை சீன மக்கள் இன்று ஆரம்பித்துள்ளனர் என ஏஎவ்பி தெரிவித்துள்ளது.