கல்யாணத்துக்கு போற மாதிரி டிரெஸ் போடுறாங்க..கல்வி தடை குறித்து தாலிபான் விளக்கம்
24 Dec,2022
தாலிபானில் பெண்களுக்கு உயர்கல்வி படிக்க தடைதாலிபானில் பெண்களுக்கு உயர்கல்வி படிக்க தடை
பொறியியல், வேளாண்மை போன்ற படிப்புகள் பெண்களின் கண்ணியம் மற்றும் ஆப்கானிஸ்தானின் கலாசாரத்திற்கு ஒத்து வராதவை என அந்நாட்டின் உயர்கல்வி அமைச்சர்
ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு தாலிபான் ஆட்சியைப் பிடித்ததில் இருந்தே உள்ள பெண்களின் சுதந்திரம் என்பது கொஞ்சம் கொஞ்சமாக தாலிபான்களால் முடக்கப்பட்டு வருகிறது. அதன் நீட்சியாக அந்நாட்டின் உயர்கல்வி அமைச்சர் கடந்த சில நாள்களுக்கு முன் மற்றொரு அதிர்ச்சிக்குரிய அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, ஆப்கானிஸ்தானில் மறு அறிவிப்பு வரும் வரை, பெண்களின் உயர் கல்வியை நிறுத்தி வைக்கப்படும் என்ற உத்தரவு உடனடியாக அமல்படுத்தப்பட்டது. இது அந்நாட்டு மாணவிகள் இடையே மட்டுமல்லாது சர்வதேச அரங்கில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும், ஐநா, ஐரோப்பிய ஒன்றியம் போன்ற சர்வதேச அமைப்புகளும் தாலிபானின் இந்த உத்தரவை விமர்சித்து கவலை தெரிவித்துள்ளன. இந்நிலையில், தங்கள் தடை உத்தரவுக்கு சர்வதேச அரங்கில் கடும் எதிர்ப்பு வந்துள்ள நிலையில், தடைக்கான காரணம் குறித்து தாலிபான் விளக்கம் அளித்துள்ளது.
அந்நாட்டின் உயர்கல்வி அமைச்சர் நிதா முகமது நதிம் பேசுகையில், "பல்கலைக்கழகம், கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு உயர்கல்வி அமைச்சகம் விரிவான வழிகாட்டுதல்களை 14 மாதங்களுக்கு முன்னர் வழங்கியிருந்தது. 14 மாதங்கள் தாண்டியும் இந்த வழிகாட்டுதல்களை மாணவிகள் பின்பற்றுவதில்லை. ஆடை தொடர்பான விதிகளையும் பின்பற்றுவதில்லை. கல்வி நிலையங்களுக்கு வரும் போது ஆண் உறவினரின் துணையுடன் வர வேண்டும் என்ற விதியையும் பின்பற்றுவதில்லை.
ஏதோ திருமண விழாவிற்கு வருவது போல மாணவிகள் ஆடை அணிந்து வருகின்றனர். ஹிஜாப் விதிகளை அவர்கள் முறையாக பின்பற்றுவதில்லை. மேலும், பொறியியல், வேளாண்மை போன்ற படிப்புகள் பெண்களின் கண்ணியம் மற்றும் ஆப்கானிஸ்தானின் கலாசாரத்திற்கு ஒத்து வராதவை. சில படிப்புகள் இஸ்லாமின் அடிப்படைகளை மீறும் விதமாக பயிற்றுவிக்கப்படுகிறது" என்று விளக்கமளித்துள்ளார்.
இதற்கிடையே நேற்று ஆப்கானிஸ்தான் நாட்டு மாணவிகள் இந்த தடை உத்தரவை எதிர்த்து தலைநகர் காபூலில் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறை தாக்குதல் நடத்தி விரட்டி அடித்தனர். அத்துடன் போராட்டத்தில் ஈடுபட்ட 5 மாணவிகளை காவல்துறை கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.