6 நிமிடத்தில் பிரித்தானியா அழியும்..! புடின்
22 Dec,2022
பிரித்தானியாவை 6 நிமிடங்களில் தாக்கி அழிக்கும் பயங்கரமான “சாத்தான் அணு ஆயுத ஏவுகணையை” போர் தாக்குதலில் பயன்படுத்தபோவதாக ரஸ்ய அதிபர் புடின் உறுதியளித்துள்ளார்.
உக்ரைனிய அதிபர் ஜெலென்ஸ்கி போர் நடவடிக்கை தொடங்கிய பிறகு முதல் முறையாக டிசம்பர் 21ம் திகதி புதன்கிழமை வெளிநாட்டு சுற்றுப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார்.
அங்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து கூடுதல் இராணுவ உதவி குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார், அதே சமயம் ரஸ்ய அதிபர் விளாடிமிர் புடினும் தனது இராணுவ தலைவர்களுடன் தீவிர ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
இந்த ஆலோசனையின் போது ரஸ்யாவிற்கு எதிராக உக்ரைனின் ஆயுதம் திரட்டும் நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ரஸ்யாவின் அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் ஹைப்பர்சோனிக் சாத்தான்-2 ஏவுகணைகள் இந்த ஆண்டின் இறுதிக்குள் போர் முனையில் நிலைநிறுத்த போவதாக அதிபர் புடின் உறுதியளித்துள்ளார்.
அத்துடன் இவை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சாத்தான் 2 அணு ஆயுதம் குறித்து இந்த ஆண்டின் தொடக்கத்தில் விவரித்து இருந்த புடின், "SARMAT மிக உயர்ந்த தந்திரோபாய மற்றும் தொழில்நுட்ப பண்புகளை கொண்டது.
மற்றும் ஏவுகணை எதிர்ப்பு பாதுகாப்பிற்கான அனைத்து நவீன வழிமுறைகளையும் சமாளிக்கும் திறன் கொண்டது.
இது உலக அளவில் ஒப்புமைகள் இல்லாதது மற்றும் இந்த ஏவுகணைக்கு சமமான ஏவுகணை நீண்ட காலத்திற்கு இருக்காது என்றும் தெரிவித்து இருந்தார்.
சாத்தான்-2(Satan-2) என்று அழைக்கப்படும் சர்மாட்-2 (SARMAT-2) RS-28 ஏவுகணை ரஸ்யாவின் ஆயுத களஞ்சியத்தில் உள்ள மிகவும் சக்தி வாய்ந்த அணு ஆயுதங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
இது தடுக்க முடியாதது மற்றும் 7.5 தொன் போர் ஆயுதத்தை சுமந்து செல்லும் திறன் கொண்டது.
இந்த SARMAT கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், 10 அல்லது அதற்கு மேற்பட்ட அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்டது.
பிரித்தானியா உட்பட 11,000 மைல்கள் தொலைவில் உள்ள இலக்குகளை 6 நிமிடங்களில் தாக்கி அழிக்கும் திறன் கொண்டது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.