ஆப்கன் பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிக்க தடை - இங்கிலாந்து, அமெரிக்கா கண்டனம்
21 Dec,2022
ஆப்கானிஸ்தான் பல்கலைக்கழகங்களில் பெண்கள் கல்வி கற்க தலிபான்கள் தடை விதித்தனர். இந்த இடைக்கால தடைக்கு இங்கிலாந்து, அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. லண்டன்: ஆப்கானிஸ்தானில் ஒரு ஆண்டுக்கும் மேலாக ஆட்சி செய்துவரும் தலிபான்கள் அந்நாட்டு மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். குறிப்பாக, அந்த நாட்டின் பெண்கள் பாலின பாகுபாட்டால் பல சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர். ஆறாம் வகுப்பு மேல் கல்வி கற்க தடை,
ஆண்கள் துணையின்றி விமானங்களில் பயணிக்க தடை, பொது இடங்களில் ஆடை கட்டுப்பாடு, பொழுதுபோக்கு பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் செல்ல தடை என பெண்களுக்கு பல கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே, ஆப்கானிஸ்தான் பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிப்பதற்கு தலிபான்கள் இடைக்கால தடை விதித்துள்ளனர். அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் இந்த உத்தரவு செல்லும். அடுத்த உத்தரவு வரும் வரை இது அமலில் இருக்கும் என தெரிவித்தனர்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்வி கற்க தாலிபான்கள் விதித்துள்ள கட்டுப்பாடுகளுக்கு இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், மகள்களுக்கு தந்தையாக, அவர்களுக்கு கல்வி மறுக்கப்படும் உலகத்தை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியாது.
ஆப்கானிஸ்தானின் பெண்களுக்கு வழங்க நிறைய இருக்கிறது. அவர்களுக்குப் பல்கலைக்கழகத்தில் நுழைய அனுமதி மறுப்பது மிகப் பெரிய பின்னடைவாகும் என பதிவிட்டுள்ளார் இதேபோல், வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆப்கானிஸ்தானில் பல்கலைக் கழகங்களில் பெண்கள் படிப்பதற்கு இடைக்கால தடை விதித்துள்ள தலிபான்களின் முடிவை அமெரிக்கா கண்டிக்கிறது. ஆப்கானிஸ்தான் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு ஆதரவாகவும், அந்நாட்டு மக்களுக்கு மனிதாபிமான ஆதரவை வழங்குவதற்கும் எங்களின் முயற்சிகளை முன்னெடுப்பதற்கு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம் என தெரிவித்துள்ளது