மேற்கு நாடுகளின் தடுப்பூசியே வேண்டாம். சீன அதிபர் ஜி ஜின் பிங்
06 Dec,2022
மேற்குலக நாடுகளிடம் இருந்து கொரோனா தடுப்பூசிகளை பெற வேண்டாம் என சீன அதிபர் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனா பெருந்தொற்றின் இரண்டு அலைகளை கடந்து உலக நாடுகள் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள நிலையில் சீனாவில் கொரோனா பெருந்தொற்று மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. நிலைமைய கட்டுப்படுத்த Zeor Covid Policy என்ற அடிப்படையில் பல்வேறு கட்டுப்பாடுகளை சீன அரசு விதித்து வருகிறது. பெரும்பாலான நகரங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. வர்த்தக நகரங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
அரசின் கட்டுப்பாடுகளை எதிர்த்து பொதுமக்கள் சீனாவில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் சீனாவின் பெரும்பாலான பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது. தற்போதுள்ள நிலையில் சீனாவிற்கு ஏராளமான கொரோனா தடுப்பூசிகள் தேவைப்படுகின்றன. அப்படியிருந்தும் மேற்குலக நாடுகளிடம் இருந்து தடுப்பூசிகளை பெறும் எண்ணம் சீனாவிற்கு இல்லை. சீன அரசின் கட்டுப்பாடுகளால் பொருளாதார மந்தம் ஏற்படும் நிலை உருவானதால், பெரும்பாலான நகரங்களில் மக்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளவோ, அரசின் கட்டுப்பாடுகளை மதிக்கவோ முன்வரவில்லை. இருந்த போதிலும் தினசரி தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
இந்த நிலையில் சீனாவில் ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் தடுப்பூசிகளையே பொதுமக்களுக்கு பயன்படுத்த ஜி ஜின் பிங் திட்டமிட்டுள்ளதாகவும், ஆனால் அந்த தடுப்பூசிகள் கொரோனா வைரசுக்கு எதிராக தீவிரமாக செயல்படாது என்றும் அமெரிக்காவின் தேசிய உளவுத்துறை இயக்குநர் ஆவ்ரில் ஹெஸ்ன்ஸ் கூறியுள்ளார். தடுப்பூசிகள் விநியோகம் செய்ய தயாராக இருப்பதாக மேற்குலக நாடுகள் முன்வந்த போதும், சீன வெளியுறவுத்துறை சரியான பதிலை தரவில்லை என்றும் கூறப்படுகிறது. ஏனென்றால் சீன அரசு இதுவரை வேறு எந்த வெளிநாட்டு தடுப்பூசிகளையும் அங்கீகரிக்கவில்லை.
வெளிநாட்டு கொரோனா தடுப்பூசிகள் வைரஸ் தொற்று ஏற்படுவதை தடுக்கிறது என்றாலும் பெரிய அளவிலான பக்க விளைவுகளை கொண்டு வந்து விடும் என சீனா கருதுகிறது. எனவே தனது நாட்டில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளையே சீன அரசு தனது மக்களுக்கு பயன்படுத்துகிறது. ஆனால் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், சீனா தனது கொள்கைகளை தளர்த்தி வெளிநாடுகளில் இருந்து தடுப்பூசிகளை வாங்கி பொதுமக்களுக்கு பயன்படுத்த வேண்டும் அமெரிக்க ஆலோசனை தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை எதிர்த்து சீனாவில் நடைபெற்று வரும் போராட்டங்களால் அரசுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றாலும், பொருளாதார மந்த நிலை மற்றுமு் பொருளாதார சுணக்கம் ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதால் சீனாவில் பல்வேறு பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.