தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வழங்க ரஷியா முடிவு - பாகிஸ்தான் அரசு தகவல்
06 Dec,2022
தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வழங்க ரஷியா முடிவு உள்ளதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. லாகூர், உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து இன்று 285-வது நாளை எட்டியுள்ளது. இந்த போர் காரணமாக ஐரோப்பிய நாடுகள் ரஷியாவுக்கு பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. மேலும், ரஷியாவிடமிருந்து கடல் வழியாக கொண்டு வரப்படும் கச்சா எண்ணெய்க்கு ஐரோப்பிய யூனியன் விலை வரம்பை நிர்ணயித்து உள்ளது. அதன்படி, ரஷியாவிடமிருந்து கடல் வழியாக வரும் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 60 அமெரிக்க டாலர்கள் அல்லது அதற்கும் குறைவான விலையை ஐரோப்பிய யூனியன் நிர்ணயித்துள்ளது. அதேவேளை, உக்ரைன் -
ரஷியா போர் தொடங்கியது முதல் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் எச்சரிக்கையையும் மீறி ரஷியாவிடமிருந்து இந்தியா அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் இந்தியா கச்சா எண்ணெய் அதிக அளவில் இறக்குமதி செய்த நாடுகள் பட்டியலில் ரஷியா முதல் இடம் பிடித்துள்ளது. கடந்த மாதம் இந்தியா அதன் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் 22 சதவீதம் ரஷியாவிடமிருந்து வாங்கியுள்ளது. ரஷியாவுக்கு அடுத்தபடியாக ஈராக் 20.5 சதவீதமும், சவுதி அரேபியா 16 சதவீதமும் என பட்டியலில் 2 மற்றும் 3-ம் இடத்தில் உள்ளன.
இந்தியாவை போல ரஷியாவிடமிருந்து தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வாங்க பாகிஸ்தான் முயற்சித்து வருகிறது.
இதற்கான பேச்சுவார்த்தைக்காக பாகிஸ்தான் பெட்ரோலியத்துறை மந்திரி மசடிக் மாலிக் கடந்த மாதம் ரஷியாவுக்கு பயணம் மேற்கொண்டார். இந்நிலையில், ரஷியா தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் விற்பனை செய்ய ஒப்புக்கொண்டுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் பெட்ரோலியத்துறை மந்திரி மசடிக் மாலிக் கூறியதாவது, பாகிஸ்தானுக்கு தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வழங்க ரஷியா முடிவு செய்துள்ளது.
இந்த கச்சா எண்ணெய் பெட்ரோல், டீசல் உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படுகிறது. பாகிஸ்தானுக்கு பெட்ரோல், டீசலும் தள்ளுபடி விலையில் ரஷியா கொடுக்க உள்ளது. திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு உற்பத்திக்காக புதிய தொழிற்சாலைகளை ரஷிய அரசு நிறுவுகிறது. 2026 மற்றும் 2026-ம் ஆண்டு போன்ற நீண்டகால ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தையை தொடங்குமாறு பாகிஸ்தானுக்கு ரஷியா அழைப்பு விடுத்துள்ளது' என்றார்.