கட்டுப்பாட்டை நீக்கினால் 20 லட்சம் பேர் உயிரிழப்பர் - சீன மருத்துவ நிபுணர்கள் கணிப்பு
04 Dec,2022
சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தினால் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழக்க நேரிடும் என சீன மருத்துவ நிபுணர்கள் கணித்துள்ளனர்.
கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா தொற்றை சந்தித்துள்ள சீனாவில், தற்போது தினசரி கொரோனா தொற்று எப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், தீவிர கொரோனா கட்டுப்பாடுகள், ஊரடங்கால் வெறுப்படைந்த சீன மக்கள் அரசுக்கு எதிராக தீவிர போராட்டத்தில் கடந்த ஒரு வாரமாக ஈடுபட்டுள்ளனர்.
சீனாவின் பெய்ஜிங் நகரில் உள்ள தினான்மென் சதுக்கத்தில் கடந்த 1989ஆம் ஆண்டு நடந்த போராட்டத்துக்குப் பின், சீனாவில் தற்போதுதான் மக்கள் மிகப் பெரியளவில் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
இதனால் தீவிர கொரோனா கட்டுப்பாடுகளையும், ஊரடங்கு விதிமுறைகளையும் சீன அதிகாரிகள் தளர்த்த ஆரம்பித்துள்ளனர்.
சீனாவின் குவான்சி மாகாண நோய் கட்டுப்பாட்டு மையத்தின் தலைவர் ஜோ ஜியாடாங் அளித்துள்ள பேட்டியில், ‘‘சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தினால் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழக்க நேரிடும். கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 23 கோடியாக அதிகரிக்கும்’’ என கூறியுள்ளார்.
‘நேச்சர் மெடிசன்’ என்ற இதழில் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் அளித்துள்ள பேட்டியில், ‘‘தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளை சீன அரசு தீவிரப்படுத்தாமல், கொரோனா கட்டுப்பாடுகளை நீக்கினால், 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பர்’’ என கூறியுள்ளனர்.