கனடா அரசு அறிவித்த அதிரடி அறிவிப்பால் இந்தியர்கள் மகிழ்ச்சி
04 Dec,2022
கொரோனாவிற்குப் பிறகு வேலையில்லாத் திண்டாட்டம் என்பது உலகளாவிய பிரச்சைனயாக உருவெடுத்துள்ளது. பெரும்பாலான உலக நாடுகள் இந்த பிரச்னையில் சிக்கித் தவித்து வருகின்றன. இந்நிலையில் கனடா வெளிநாட்டினர் ஏராளமானோருக்கு வேலை வாய்ப்பிற்கான அனுமதியை வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் வரும் 2023 ஆம் ஆண்டு ஜனவரி முதல் மேலும் 2 லட்சம் வெளிநாடு வாழ் குடும்பங்களுக்கு தற்காலிக வேலைவாய்ப்புகளை வழங்க கனடா அரசு முடிவு செய்துள்ளது.
அதாவது ஏற்கனவே கனடாவில் வேலை செய்து வரும் நபர்களின் இணையர்களுக்கும், அவர்களின் குடும்பங்களில் இருக்கும் வேலை செய்யக் கூடிய நிலையில் இருக்கும் குழந்தைகளுக்குமான வேலை பெறுவதற்கான தகுதிகளை விரிவாக்கம் செய்ய கனடா அரசு முடிவு செய்துள்ளது. இதனால் கனடாவில் வேலை செய்து வரும் சுமார் 2 லட்சம் பேர்களின் குடும்பத்தினர் பயன் பெற உள்ளனர்.
அப்படி வருபவர்களை குறுகியகால மற்றும் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் சுகதாரம், சுற்றுலா மற்றும் வணிக நிறுவனங்களில் வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கவும் கனடா அரசு முடிவு செய்துள்ளது. இந்த லட்சக் கணக்கானோர் வேலைவாய்ப்பை பெற முடியும். ஏற்கனவே இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் அக்டோபர் வரையிலான கால கட்டத்தில் மட்டும் கனடா சுமார் 6 லட்சத்து 45 ஆயிரம் ஒர்க் விசாக்களை வழங்கியுள்ளது. இவர்களில் இந்தியர்கள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போதுள்ள சட்ட நடைமுறைகளின் படி ஏற்கனவே கனடாவில வேலையில் இருப்பவர்களின் இணையர்கள் உயர்தர வேலைத் தகுதி பெற்றிருந்தால் மட்டுமே கனடாவில் வேலைக்கான வாய்ப்பை பெற முடியும், ஆனால் விதிகளில் மேற்சொன்ன தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டால் அதிகமானோர் வேலைவாய்ப்பை பெற முடியும். அதிக ஊதியம் வாங்கும் வெளிநாட்டு ஊழியர்களின் குடும்பங்களுக்கு அனுமதி அளிப்பது, குறைந்த ஊதியத்தில் பணியாற்றுவதற்கான விசா வழங்குதல் மற்றும் வேளாண் பணிகளில வெளிநாட்டு பணியாளர்களை பயன்படுத்துதல் என 3 பிரிவுகளாக இந்த புதிய குடியேற்ற விதி தளர்வை மெல்படுத்தவும் கனடா அரசு முடிவு செய்துள்ளது.
கனடா முழுவதும் பல்துறைகளில் ஆட்கள் பற்றாக்குறை இருப்பதால் முதலீட்டாளர்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருவதாகவும், கனடா அரசின் தளர்வால், முதலீட்டாளர்களின் தேவைகள் பூர்த்தியடையும் என்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும், கனடாவின் குடியேற்றத்துதேறை அமைச்சர் சீன் ஃபிரேசர் கூறியுள்ளார்.
திறனுள்ள தற்காலிக் தொழிலாளர்களால் கனடாவில் உள்ள உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கு தேவையான வேலையாட்கள் கிடைத்து வந்ததாகவும், கொரோனா பெருந் தொற்று ஏற்பட்ட பிறகு கட்டுப்பாடுகளால் வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கை கடுமையாக குறைந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் கனடா அரசு விளக்கம் அளித்துள்ளது.