அப்பா சாவதை நேரில் பார்க்க விரும்பிய மகள்; மறுத்த நீதிபதி
27 Nov,2022
அமெரிக்காவில் ஒரு காவல்துறை அதிகாரியைக் கொலை செய்த வழக்கில் விரைவில் மரண தண்டனை பெற இருக்கும் கைதிக்கு தண்டனை நிறைவேற்றப்படுவதை அவரது மகள் நேரில் பார்க்க வேண்டும் என்று விடுக்கப்பட்டிருந்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
தனது தந்தையின் மரணத்தை நேரில் பார்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்த அவரது மகள் வயதில் மிகவும் இளையவர் என்பதால் மிசௌரி மாகாண சட்டம் அதை அனுமதிக்காது என நீதிபதி தெரிவித்துள்ளார். கடந்த 2005ஆம் ஆண்டு ஒரு காவல்துறை அதிகாரியைக் கொன்ற வழக்கில் கெவின் ஜான்சன் என்பவருக்கு வரும் செவ்வாய்க்கிழமை மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. தற்போது ஜான்சனுக்கு 37 வயதாகிறது. கொலைக் குற்றத்தை இழைத்த போது அவரது வயது 19.
தமக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும்போது தமது மகள் கோரி ரெமே உடனிருக்க அனுமதிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
ரமேவுக்கு இரண்டு வயது இருக்கும் போதே ஜான்சன் சிறைக்கு சென்றுவிட்டார். நேரடி சந்திப்புகள், தொலைபேசி அழைப்புகள், கடிதங்கள் மற்றும் மின்னஞ்சல்கள் மூலமாக தந்தைக்கும் மகளுக்குமான உறவு தொடர்ந்தது. புதிதாகப் பிறந்த தன்னுடைய ஆண் குழந்தையோடு கடந்த மாதம் சிறைக்கு வந்த ரமே, ஜான்சனுக்கு அவரது பேரனை அறிமுகப்படுத்தினார்.
ரமேவின் அரசமைப்புசட்ட உரிமைகளை மாகாண சட்டம் மீறுவதாக வாதிட்டு, அவர் சார்பாக அமெரிக்கன் சிவில் லிபர்டீஸ் யூனியன் ஓர் அவசர மனுவை தாக்கல் செய்தது.
21 வயதுக்கு உட்பட்டவர்கள் மரண தண்டனை நிறைவேற்றத்தை நேரில் பார்ப்பதை தடை செய்யும் மிசௌரி மாகாண சட்டத்தில் எந்தப் பாதுகாப்பு நோக்கமும் இல்லை என அமெரிக்கன் சிவில் லிபர்டீஸ் யூனியன் கூறுகிறது.
“தந்தையின் கடைசி தருணத்தில் என்னால் அவருடன் இருக்க முடியாது என்பது மனமுடையச் செய்கிறது” என ரமே அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். மேலும், சிறையில் தன்னை மீட்டெடுக்க ஜான்சன் கடுமையாக உழைத்ததாக குறிப்பிட்டுள்ள அவர், மிசௌரி கவர்னர் அவருக்கு மரண தண்டனையில் இருந்து மன்னிப்பு வழங்க பிரார்த்திப்பதாகவும் கூறியுள்ளார். மூன்று குழந்தைகளுக்கு தந்தையான காவல் அதிகாரி வில்லியம் மெக்கென்டீயை சுட்டுக் கொலை செய்த வழக்கில் ஜான்சன் தூக்கிலிடப்பட உள்ளார். ஜான்சனின் உயிரைக் காப்பாற்றக் கோரி அவரது வழக்கறிஞர்கள் மேல்முறையீடு செய்துள்ளனர். ஜான்சன் இழைத்த குற்றத்தை அவர்கள் மறுக்காவிட்டாலும்கூட, மரண தண்டனை வழங்கப்பட்டதில் இனவாதம் முக்கிய பங்கு வகித்தது என்பது அவர்கள் தரப்பு வாதமாக உள்ளது.