மலேசியாவின் புதிய பிரதமராக அன்வார் இப்ராஹிம் உத்தியோகபூர்வமாக பதவியேற்பு!
25 Nov,2022
பல்லின, பல மதங்கள் கொண்ட தென்கிழக்கு ஆசிய நாடான மலேசியாவில், புதிய பிரதமராக அன்வார் இப்ராஹிம் பதவியேற்றுள்ளார்.
அனைவரையும் உள்ளடக்கிய அரசாங்கத்தை வழிநடத்துவதாக உறுதியளித்த அவர், இன்று (வெள்ளிக்கிழமை) நாட்டின் நிர்வாக தலைநகரான புத்ராஜெயாவில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் காலை 9 மணிக்கு தனது பணியைத் தொடங்கினார்.
75 வயதான அன்வார் முந்தைய நாள் மன்னர் முன்னிலையில் பதவியேற்ற பிறகு, தனது முதல் ஊடகசந்திப்பில், தான் சம்பளம் வாங்கமாட்டேன் என்றும், தனது அரசாங்கம் அனைத்து மலேசியர்களின், குறிப்பாக ஓரங்கட்டப்பட்ட மற்றும் வறியவர்களுக்கும், இனம் அல்லது மதத்தைப் பொருட்படுத்தாமல் அவர்களின் உரிமைகளுக்கு உத்தரவாதம் அளித்து பாதுகாக்கும் என்றும் அவர் கூறினார்.
மேலும், சீர்திருத்தத்தின் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார். ‘நல்லாட்சி, ஊழலுக்கு எதிரான இயக்கம், நீதித்துறை சுதந்திரம் மற்றும் சாதாரண மலேசியர்களின் நலன் ஆகியவற்றில் நாங்கள் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ள மாட்டோம்’ என்று அவர் கூறினார்.
அன்வார் கடந்த சனிக்கிழமை ஒரு முடிவற்ற தேர்தலுக்குப் பிறகு மன்னரால் பிரதமராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.