ஏவுகணை சோதனைகள் அமெரிக்காவை தாக்குவதற்கான பயிற்சி
08 Nov,2022
-
ஏவுகணை சோதனைகள் அமெரிக்காவை தாக்குவதற்கான பயிற்சி என்று வடகொரியா தெரிவித்துள்ளது. பியாங்யாங், அமெரிக்கா மற்றும் தென்கொரியா படைகள் கொரிய எல்லையில் கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.
கடந்த வாரத்தில் மட்டும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை உள்பட டஜன்கணக்கான ஏவுகணைகளை ஏவிய வடகொரியா தென்கொரியாவை நோக்கி நூற்றுக்கும் மேற்பட்ட போர் விமானங்களையும் பறக்கவிட்டது. இதனால் கொரிய தீபகற்பத்தில் தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது. இந்த ஏவுகணை சோதனைகள் குறித்து வடகொரியா ராணுவம் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:- வடகொரியாவின் சமீபத்திய ராணுவ நடவடிக்கைகள், எதிரிகளின் ஆத்திரமூட்டும் ராணுவ நகர்வுகள் எவ்வளவு விடாமுயற்சியுடன் தொடர்கிறதோ,
அவ்வளவு முழுமையாகவும், இரக்கமின்றியும் வடகொரியா ராணுவம் அவர்களை எதிர்கொள்ளும் என்பதற்கான தெளிவான பதில். சமீபத்திய சரமாரி ஏவுகணை சோதனைகள் தென்கொரியா மற்றும் அமெரிக்காவின் முக்கிய இலக்குகளான விமான தளங்கள் மற்றும் அணு ஆயுதங்களை உள்ளடக்கிய ராணுவ கட்டமைப்புகள் போன்றவற்றை இரக்கமின்றி தாக்குவதற்கான பயிற்சியாகும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிக்கையுடன் கடந்த 2-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை நடத்திய ஏவுகணை சோதனைகள் தொடர்பான புகைப்படங்களையும் வடகொரியா ராணுவம் வெளியிட்டுள்ளது.