ரஷ்யாவைவிட்டு தப்பிச் சென்ற புடினின் மகள்!
28 Oct,2022
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் மகள் ஸ்தானத்தில் பார்க்கப்படும் பிரபல மொடல், கைதாகும் பயத்தில் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாஸ்கோவில் அமைந்துள்ள அவரது குடியிருப்பை பொலிசார் சோதனை மேற்கொண்டதன் சில மணி நேரம் முன்பு அவர் தப்பியுள்ளார். ரஷ்ய தொலைக்காட்சி நட்சத்திரமும் மொடலுமான 40 வயது Ksenia Sobchak விளாடிமிர் புடினுக்கு எதிராக அரசியல் செய்து வருபவர்.
கடந்த 2018ல் புடினுக்கு எதிராக ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியிட்டார். ஆனால் நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டார். மாஸ்கோவின் பாரிஸ் ஹில்டன் என அறியப்படும் இவர், ரஷ்ய அதிகாரிகளிடம் சிக்காமலிருக்க, நடந்தே எல்லை கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெலாரஸ் எல்லையில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கமெராக்களில் குறித்த காட்சிகள் பதிவாகியுள்ளது. அடையாளம் தெரியாத நபர் ஒருவருடன் நடந்து செல்லும் Ksenia Sobchak, இவர்களை எவரேனும் தொடர்கிறார்களா என்பதையும் கண்காணித்தப்படியே செல்கின்றனர்.
புதன்கிழமை உள்ளூர் நேரப்படி மதியம் 1.32 மணிக்கு அவர் பெலாரஸ் எல்லையில் கடவுச்சீட்டு சரிபார்க்கும் அலுவலகத்தில் ஆவணங்களை ஒப்படைத்துள்ளார். ஆனால் இதற்கும் அரை மணி நேரம் முன்னர் தான், Ksenia Sobchak ரஷ்யாவில் இருந்து தப்பியுள்ளதாக புடின் நிர்வாகம் அறிவித்துள்ளது.
வியாழக்கிழமை அவர் லிதுவேனியா நாட்டில் நுழைந்துள்ளதாகவும், குறித்த தகவலை அரசாங்கமே உறுதி செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.