மூக்கு வழியாக நுழைந்து சிறுவனின் மூளையை தின்ற ஒட்டுண்ணி!
22 Oct,2022
ஏரியில் குளிக்கச் சென்றபோது மூளையை தின்னும் அமீபா மூக்கில் ஏறியதால் சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அக்டோபர் 5-ஆம் திகதி ஹூவர் அணைக்கு அருகில் நீந்திக் கொண்டிருந்த போது சிறுவனின் மூக்கு வழியாக கொடிய அமீபா ஒட்டுண்ணி தலைக்கு ஏறியிருக்கலாம் என நம்பப்படுகிறது. மூளையை உண்ணும் அமீபா என்று அழைக்கப்படும் Naegleria fowleri என்ற தொற்றினால் சிறுவன் உயிரிழந்தார்.
நெவாடா சுகாதார அதிகாரிகள் நோயாளியை 18 வயதுக்குட்பட்ட ஆண் என்று மட்டுமே அடையாளம் கண்டுள்ளனர். மற்ற தனிப்பட்ட விவரங்களை வெளியிடவில்லை.
ஒரு வாரம் கழித்து அவருக்கு அறிகுறிகள் தோன்றியதையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சை பலனின்றி அக்டோபர் 19-ஆம் திகதி அவர் உயிரிழந்ததாக சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
இந்த வகையான தொற்று மிகவும் அரிதான நிகழ்வு என்று கூறிய சுகாதார அதிகாரிகள், அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் இரங்கலை தெரிவித்தனர்.
அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாட்டு மையத்தின் படி (CDC), நெக்லேரியா (Naegleria ) என்பது அமெரிக்காவில் உள்ள நன்னீர் ஏரிகள், ஆறுகள் மற்றும் வெந்நீர் ஊற்றுகளில் பொதுவாகக் காணப்படும் ஒற்றை செல் உயிரினங்கள் ஆகும். நெக்லேரியாவின் Naegleria fowleri எனும் ஒரே ஒரு இனம் மட்டுமே மனிதர்களைப் பாதிக்கிறது என்று தெரிவித்துள்ளது.