ரஷ்யாவின் ரகசிய வாக்கெடுப்பு கோரிக்கை நிராகரித்த ஐ.நா..!
13 Oct,2022
ரஷ்யாவை பயங்கரவாத நாடாக அறிவிக்க வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்க அதிபர் பைடனிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
ரஷ்யாவையும் கிரைமியாவையும் இணைக்கும் கெர்ச் பாலம் மீது குண்டுவீசப்பட்டதைத் தொடர்ந்து உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது. கடந்த 3 மாதங்களில் இல்லாத அளவிலான தீவிர தாக்குதல்களை ரஷ்யா முன்னெடுத்து வருவதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. அந்நாட்டின் முக்கிய நகரங்களான லிவிவ், ஜாபோரிஜியா ஆகியவற்றின் மீது திங்கள் கிழமை இரவும் தாக்குதல் நீடித்ததாகவும், இதனால் உயரிழந்தவர்களின் எண்ணிக்கை 19- ஆக அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என்றும் தாக்குதல் குறித்த அபாய ஒலியை அலட்சியப்படுத்த வேண்டாம் என்றும் உக்ரைன் அரசு மக்களை கேட்டுக்கொண்டுள்ளது. ரஷ்யாவின் தாக்குதலுக்கு கண்டனம் தெரித்துள்ள அதிபர் பைடன், புதினின் நடவடிக்கை மிருக்கத்தனமானது என சாடியுள்ளார்.
தொலைபேசியில் உக்ரைன் அதிபரை தொடர்பு கொண்ட பைடன், அமெரிக்கா உக்ரைனுக்கு மேம்பாட்ட வான் பாதுகாப்பு அமைப்புகளை வழங்கும் என்று உறுதியளித்துள்ளார்.அப்போது, ரஷ்யாவை பயங்கரவாத நாடாக அறிவிக்க வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பைடனிடம் கோரிக்கை வைத்தார்.
இதனிடையே, உக்ரைனில் போர் தீவிரமாகியுள்ள நிலையில், தமிழ் நாடு மாணவர்கள் அங்கு செல்ல வேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது. உக்ரைனில் உள்ள இந்தியர்கள் அவசியமற்ற பயணங்களை தவிர்க்குமாறு ஏற்கெனவே மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்நிலையில், உக்ரைனிலிருந்து திரும்பிய மாணவர்கள் அங்கு செல்ல வேண்டாம் என வெளிநாட்டு வாழ் தமிழர் நலத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இந்த நிலையில், டொனெட்ஸ்க், கெர்சன், லுஹான்ஸ்க், ஜபோரிஜியா ஆகிய பகுதிகளை ரஷ்யா சட்டவிரோதமாக இணைப்பதைக் கண்டிக்கும் தீர்மானத்தின் மீது ஐ.நா.சபையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. வாக்கெடுப்பை ரகசியமாக நடத்த வேண்டும் என ரஷ்யா கோரிக்கை வைத்தது. ஆனால், `பதிவுசெய்யப்பட்ட வாக்கெடுப்புதான் நடத்தவேண்டும்' என்று இந்தியா உட்பட 107 ஐ.நா உறுப்பு நாடுகள் வாக்களித்தன. இதை அடுத்து, ரஷ்யாவின் ரகசிய வாக்கெடுப்பு கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.