கோலாலம்பூர், கட்சியினர் கொடுத்த நெருக்கடியை அடுத்து, பார்லிமென்டை கலைத்து, மலேஷிய பிரதமர் இஸ்மாயில் சாப்ரி யாகூப் நேற்று அறிவித்தார்.
ஆசிய நாடான மலேஷியா, 1957ல் ஆங்கிலேயரிடம் இருந்து விடுதலை பெற்றது. இதைத் தொடர்ந்து அங்கு நடந்த வந்த தேர்தல்களில், யு.எம்.என்.ஓ., எனப்படும் ஐக்கிய மலாய் தேசிய அமைப்பு தலைமையிலான கூட்டணி அரசே அமைந்து வந்தது.
கடந்த 2018ல் நடந்த தேர்தலில், பெர்சாட்டு என்ற எதிர்க்கட்சி கூட்டணி அரசு வென்றது. ஆனால், கூட்டணிக் கட்சிகள் வெளியேறியதால் அந்த ஆட்சி கவிழ்ந்தது.
இதையடுத்து, 2020ல் நடந்த தேர்தலில், யு.எம்.என்.ஓ., கூட்டணி மீண்டும் வென்றது.
கட்சியில் ஏற்பட்ட குழப்பத்தால், பிரதமர் பதவியில் இருந்து முகைதீன் யாசின் வெளியேறினார். கடந்தாண்டு ஆகஸ்டில், இஸ்மாயில் சாப்ரி யாகூப் பிரதமராக பதவியேற்றார்.
தற்போதைய பார்லிமென்டின் பதவிக்காலம் முடிய, மேலும் ஒன்பது மாதங்கள் உள்ளன. இந்நிலையில், முன்னதாகவே தேர்தலை சந்திக்க வேண்டும் என்று, யு.எம்.என்.ஓ., கட்சி மூத்ததலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
கூட்டணி கட்சிகள் நெருக்கடியை சமாளிக்க, முன்னதாகவே தேர்தலை நடத்தி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்படி, அந்தக் கட்சி மூத்த தலைவர்கள் பிரதமர் யாகூப்புக்கு நெருக்கடி கொடுத்தனர்.
இதையடுத்து, பார்லிமென்டை கலைக்கும் முடிவை பிரதமர் இஸ்மாயில் சாப்ரி யாகூப் நேற்று அறிவித்தார். முன்னதாக மன்னர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹமது ஷாவை, அவர் சந்தித்து இது குறித்து ஆலோசனை நடத்தினார்.
அவரது ஒப்புதலுடன் பார்லிமென்டை கலைக்கும் முடிவை பிரதமர் யாகூப் நேற்று அறிவித்தார்.
மலேஷிய சட்டத்தின்படி,பார்லிமென்ட் கலைக்கப்பட்டதில் இருந்து, 60 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
நவம்பர் மாத இறுதியில்மழைக்காலம் துவங்கும்என்பதால், அதற்கு முன்னதாக தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.