விமானத்தைத் துளைத்து பயணியின் கழுத்தில் பாய்ந்த குண்டு - மியான்மரில் பரபரப்பு!
02 Oct,2022
மியான்மர் நாட்டில் 3000 அடிக்கு மேல் உயரத்தில் பறந்துக்கொண்டுயிருந்த விமானத்தில் தரையிலிருந்து சுடப்பட்ட குண்டு பாய்ந்ததில் பயணி காயம் அடைந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மியான்மர் நேஷனல் ஏர்லைன்ஸ் விமானம் தரையிலிருந்து 3000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த போது திடீரென குண்டு ஒன்று விமானத்தைத் துளைத்து இருக்கையில் அமர்ந்திருந்த பயணியில் கழுத்தில் பாய்ந்தது. அதில் அவர் பலத்த காயம் அடைந்த நிலையில் விமானம் லோகாவ்கில் தரையிறக்கப்பட்டு, அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த அதிர்ச்சியான சம்பவத்தைப் பற்றி விசாரணை நடத்தப்பட்டத்தில், குண்டு தாக்கி காயம் அடைந்த நபர் 27 வயதான பயணி, நாய்பிடாவ்யில் இருந்து லோகாவ்விற்கு பயணம் செய்துள்ளார் என்று தெரிவித்துள்ளனர். மேலும் எப்படிக் குண்டு விமானத்தில் பாய்ந்தது, யார் இந்த செயலை செய்து இருப்பார் என்று விசாரணை நடத்தப்பட்டு வந்தது. முதற்கட்டமாக லோகாவ் நகரத்திற்கு வரும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
விமானத்தைக் குண்டு துளைத்த இடமும், காயம் அடைந்தவரின் புகைப்படமும் கேபின் க்ரூ கிளப் என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. அதில் காயம் அடைந்த நபர் கழுத்தில் ரத்தம் சொட்டச் சொட்ட இருக்கையில் காகிதத்தை வைத்து அழுத்திப்பிடித்திருப்பது தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து, மியான்மர் ராணுவ அரசு, இந்த செயலை செய்தது ராணுவ ஆட்சியை எதிர்க்கும் கயா மாநில புரட்சிப் படை என்று கூறியது ஆனால் அதை அவர்கள் நிராகரித்துவிட்டனர். மேலும் மியான்மர் ராணுவ அரசின் பேச்சாளர் மேஜர் ஜெனரல் ஜாவ் மின் துன் தெரிவிக்கையில், இது ஒரு தீவிரவாத செயல் என்று கூறியுள்ளார்.
அந்த வகையில் இந்த செயல் கரேன்னி தேசிய முற்போக்கு கட்சியால் நடத்தப்பட்டுள்ளது என்று மாநில ஊடகத்திடம் தெரிவித்துள்ளார். கரேன்னி தேசிய முற்போக்கு கட்சி மியான்மரை ராணுவ ஆட்சி கைப்பற்றியதை எதிர்த்து புரட்சி அமைப்பாக செயல்ப்பட்டுக்கொண்டுயிருக்கிறது.
மியான்மரின் ஊடக தகவல் படி அது ஏடிஆர்-72 விமானம் 63 பயணிகளை ஏற்றிச் சென்றது என்று தெரியவந்துள்ளது. 2021 ஆம் ஆண்டு ஆங் சான் சூகி -யின் மக்கள் ஆட்சியைக் கவிழ்த்து ராணுவம் ஆட்சியைப் பிடித்தனர். அதனைத் தொடர்ந்து நாட்டில் பல்வேறு புரட்சிப் படைகள் தோன்றி ராணுவ ஆட்சியை எதிர்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.