உக்ரைனில் இரு பிராந்தியங்களை சுதந்திர நாடாக அறிவித்த ரஷ்யா!
30 Sep,2022
ரஷ்ய அதிபரின் இந்த அறிவிப்பை ஏற்க முடியாது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குவாட்ரெஸ் ஆகியோர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
உக்ரைன் நாட்டில் இருந்து கைப்பற்றிய இரு பகுதிகளை சுதந்திர பிராந்தியங்களாக அறிவித்து ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் உத்தரவு பிறப்பித்துள்ளார். உக்ரைன் போரில் ரஷ்யா அணு ஆயுதத்தை பயன்படுத்துவோம் என அறிவித்திருந்த பின்னணியில் இந்த அறிவிப்பை புதின் அறிவித்துள்ளார்.
ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் பிப்ரவரி 24ஆம் தேதி உக்ரைன் நாட்டின் மீது போர் அறிவித்து ராணுவ நடவடிக்கை மேற்கொண்டார். எட்டு மாதங்கள் ஆகியும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் இந்த திடீர் படையெடுப்பு ஓய்ந்தபாடில்லை. இரு நாடுகளின் போரானது அந்த பிராந்தியத்தை மட்டுமல்லாது உலக நாடுகளில் அனைத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐரோப்பிய கண்டத்தில் பாதுகாப்பு தொடர்பான அச்சத்தை உருவாக்கியதுடன், உலக நாடுகளில் பெரும் பொருளாதார சரிவுகளை இந்த போர் ஏற்படுத்தியுள்ளது. ஆரம்பத்தில் ரஷ்யா வெகு வேகமாக முன்னேறி உக்ரைனின் முன்னணி நகரங்களை கைப்பற்றியது. இருப்பினும் உக்ரைன் சரணடையாமல் ரஷ்ய படைகளை எதிர்த்து போராடி ரஷ்யாவுக்கு ஆச்சரியம் தந்தது. உக்ரைனுக்கு ஆதரவாக ஐரோப்பிய அமெரிக்க கூட்டமைப்பான நோட்டோ நாடுகள் பொருளாதார ஆயுத உதவிகளை வழங்கி வந்தன.
அதன் துணை கொண்டு ரஷ்ய படைகளை உக்ரைன் எதிர்த்து நின்று தாக்குப்பிடித்து வருகிறது. இந்நிலையில், தற்போது போரில் முக்கிய நகர்வாக ரஷ்யா கட்டுப்பாட்டில் இருந்து உக்ரைனின் நகரப்பகுதிகளை உக்ரைன் நாட்டு படையினர் மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளனர். இதைத் தொடர்ந்து ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் உக்ரைன் மற்றும் நோட்டோ நாடுகளை அச்சுறுத்தும் விதமாக அணு ஆயுதத்தை பயன்படுத்துவோம் என அதிரடியாக அறிவித்தார்.
இந்நிலையில், அடுத்த அதிரடியாக தெற்கு உக்ரைன் பிராந்தியத்தின் கேர்சன் மற்றும் சபோரிசியா ஆகிய இரு பிராந்தியங்களை சுதந்திரம் அடைந்த தன்னாட்சி பிராந்தியமாக ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் அறிவித்துள்ளார். மேலும், ரஷ்ய ராணுவம் கைப்பற்றி அதன் கட்டுப்பாட்டில் உள்ள லுங்கான்ஸ்க் மற்றும் டோன்ஸ்க் ஆகிய இரு பிராந்தியங்களையும் தன்னாட்சி பிராந்தியங்களாக ரஷ்யா அறிவிக்கவுள்ளது. மாஸ்கோவில் நடைபெறும் அரசு விழாவில் ரஷ்ய அரசு இதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறது.
ரஷ்ய அதிபரின் இந்த அறிவிப்பை ஏற்க முடியாது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குவாட்ரெஸ் ஆகியோர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். உக்ரைன் நாட்டின் இறையாண்மையில் ரஷ்யாவின் தலையீட்டை எந்தவிதத்திலும் ஏற்க முடியாது என அமெரிக்கா கூறிவருகிறது.