ரஷ்யாவில் வெடித்துள்ள போராட்டம்: தலைமறைவான புடின்!
25 Sep,2022
உக்ரைன் தொடர்பில் ரஷ்யா முழுவதும் போராட்டம் வெடித்துள்ள நிலையில், ஜனாதிபதி விளாடிமிர் புடின் இரகசிய மாளிகையில் விடுமுறையை கொண்டாட சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைனில் போராட புதிதாக அணித்திரட்டும் ரஷ்ய ஜனாதிபதியின் திட்டம் பொதுமக்களிடையே கொந்தளிப்பையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. உக்ரைனில் போர் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் சுமார் 300,000 மக்களை திரட்டும் பணியை புடின் முன்னெடுத்தார்.
மட்டுமின்றி, வீடு வீடாக சென்று ஆட்களை திரட்டும் பணிகளும் அதிகாரிகள் தரப்பில் முன்னெடுக்கப்பட்டது. ஆனால், இந்த படை திரட்டும் பணியானது எழைகள், சிறுபான்மையினரை குறிவைக்கும் திட்டமாக மாற வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இதனால், முக்கிய நகரங்களில் அதிகமாக போராட்டங்கள் ஏற்பட வாய்ப்பிருக்காது என புடின் நிர்வாகம் நம்பலாம் எனவும் தெரிவிக்கின்றனர். இந்த நிலையிலேயே, விளாடிமிர் புடின் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வனப்பகுதியில் அமைந்துள்ள தமது இரகசிய மாளிகைக்கு புடின் விடுமுறையை கொண்டாட சென்றிருக்கலாம் என்றே நம்பப்படுகிறது. மேலும், அவரது படை திரட்டல் அறிவிப்பால் ஏற்பட்ட குழப்பத்தில் இருந்து தன்னை பாதுகாப்பான தூரத்தில் நிறுத்திக் கொள்ள புடின் விரும்புகிறார் என்றே கூறப்படுகிறது.
இதனிடையே, இந்த படை திரட்டும் உத்தரவால் ஆத்திரமடைந்துள்ள மக்கள், நாட்டைவிட்டு பெருந்திரளாக வெளியேறி வருகின்றனர். பொதுவாக மாஸ்கோவில் இருந்து துபாய் மாகாணம் வரை செல்லும் விமான கட்டணம் 181 பவுண்டுகள் என இருந்த நிலையில், தற்போது 8,000 பவுண்டுகள் என உச்சம் தொட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.