நேபாளத்தில் கொட்டித்தீர்த்த கனமழை.. வடியாத வெள்ளம் - 13 பேர் பலி, பலர் மாயம்!
19 Sep,2022
நேபாளத்தில் கனமழை வெள்ள பாதிப்புநேபாளத்தில் கனமழை வெள்ள பாதிப்பு
நேபாளத்தில் ஒரு வாரத்தில் மட்டும் கனமழை வெள்ளம் காரணமாக 13 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 10க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர்.
தெற்காசிய நாடுகளில் கடந்த சில மாதங்களாகவே கனமழை வெள்ள பாதிப்பு வழக்கத்தை விட தீவிரமாக நிகழ்கின்றன. இதன் காரணமாக இந்தியாவின் சில வட மாநிலங்கள், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகள் தீவிர பாதிப்பை கண்டுவரும் நிலையில், தற்போது நேபாளத்திலும் கனமழை வெள்ளப் பேரிடர் ஏற்பட்டுள்ளது.
பொதுவாக இந்த நாடுகளில் ஜூன் முதல் செப்டம்பர் மாத காலத்தில் பருவமழை பொழிவு தீவிரமாக இருக்கும். ஆனால், இந்த கனமழையால் வெள்ளம், நிலச்சரிவு போன்ற பாதிப்புகள் இந்தாண்டு வரலாறு காணாத அளவில் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, பாகிஸ்தானில் கடந்த மாதம் வரலாறு காணாத அளவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு உயிரிழப்புகளை ஏற்படுத்தியதுடன், பொருளாதார ரீதியாக பெரும் பின்னடைவை தந்துள்ளது. வங்கதேசத்திலும் இந்தாண்டு பல்வேறு பிராந்தியங்களில் வெள்ள பேரிடர் ஏற்பட்டது. இதை தொடர்ந்து நேபாள நாட்டிலும் வெள்ள பேரிடர் இந்தாண்டு கனமழை வெள்ளப் பெருக்கு காரணமாக இதுவரை 48 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த சில நாள்களாகவே அந்நாட்டின் தலைநகர் காத்மண்டுவின் மேற்கு பகுதியில் உள்ள அச்சாம்,தார்சுலா ஆகிய மாவட்டங்களில் விடாது கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக லஸ்கு மற்றும் மகாகாளி ஆகிய நதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு வீடுகள் மற்றும் பாலங்கள் அடித்து செல்லப்பட்டன. அத்துடன் பல இடங்களில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இந்த கனமழை வெள்ளம் காரணமாக 13 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 10க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர்.
பல மாவட்டங்களில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.சம்பவ இடங்களுக்கு பேரிடர் மீட்பு குழுவை அனுப்பிவைத்துள்ள அரசு மீட்பு பணிகளை துரிதமாக நடத்த சில இடங்களில் ஹெலிகாப்டர்களை பயன்படுத்துகின்றன. நேபாளத்தில் பல பகுதிகள் மலைப் பிரதேசம் என்பதால் மண்ணில் புதைந்த வீடுகளில் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்டெடுக்கப்பட்டு மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் வடிந்து மீட்பு பணிகள் முழுமையாக நடைபெற்ற பின்னரே முழுமையான சேத விவரம் வெளிவரும் என்றும் அப்போது உயிரிழப்பு எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கலாம் என அரசு கவலை தெரிவித்துள்ளது.