புடினின் திட்டத்தை தவிடுபொடியாக்கிய ஐரோப்பிய நாடுகள்!
05 Sep,2022
ஐரோப்பிய நாடுகளுக்கான எரிவாயு வழங்கலை ரஷ்யா முடக்கியுள்ள நிலையிலும், அடுத்தவார தொடக்கத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் இலக்கை எட்டவிருப்பதாக நெதர்லாந்து அறிவித்துள்ளது. அக்டோபர் மாதத்திற்கான எரிவாயு தேவையில் 80% அளவுக்கு சேமித்துள்ளதாக ஜேர்மனி அறிவித்திருந்தது. இந்த நிலையில், தற்போது நெதர்லாந்தும் ஐரோப்பிய ஒன்றியத்தின் எரிவாயு நிரப்பும் இலக்கை எதிர்வரும் வாரத்தில் எட்டவிருப்பதாக தெரிவித்துள்ளது.
எதிர்வரும் வாரத்தின் துவக்கத்தில் 80% சேமிப்பு இலக்கை நெதர்லாந்து எட்டும் என்ற நம்பிக்கை தமக்கிருப்பதாக தொடர்புடைய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வரவிருக்கும் குளிர்காலத்திற்கு முன்னர் எரிவாயு சேமிப்பு தளங்களில் 80 சதவீதம் நிரம்பியிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்ற இலக்கை ஐரோப்பிய ஒன்றியம் இந்த ஆண்டு அறிவித்திருந்தது.
மட்டுமின்றி, எதிர்வரும் ஆண்டுகளில் இந்த சேமிப்பு இலக்கானது 90% என்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் உறுப்பு நாடுகளுக்கு வலியுறுத்தியது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு நீடித்துவரும் நிலையில், எரிவாயு வழங்கல் தடைபடும் சூழல் உருவாகியுள்ளதை கருத்தில்கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இதன் ஒருபகுதியாக ஜேர்மனி தங்கள் இலக்கை எட்டிவிட்டதாக அறிவித்திருந்தது. தற்போது நெதர்லாந்து நிர்வாகம் தெரிவிக்கையில், வெள்ளிக்கிழமை நிலவரப்படி எரிவாயு சேமிப்பு 77.5% கொள்ளளவை எட்டியுள்ளது.
Norg பகுதியில் அமைந்துள்ள தளத்தில் எரிவாயு சேமிப்பானது 83.3% எனவும், ஆனால் ஐரோப்பாவின் மிகப்பெரிய திறந்த அணுகல் தளம் அமைந்துள்ள Bergermeer பகுதியில் 67.8% மட்டுமே எரிவாயு நிரம்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் Norg பகுதியில் 90% அளவுக்கு எரிவாயு நிரப்ப தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகரித்து வரும் விலைவாசி உயர்வு பொருளாதாரத்தை அச்சுறுத்தி குடும்பங்களை வறுமையை நோக்கி தள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது என்றே நிபுணர்கள் தரப்பு கூறுகின்றனர். இந்த நிலையில் ஐரோப்பிய ஒன்றியம் முக்கிய நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என்றே நிபுணர்கள் தரப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.