ரஷ்யாவில் ஆக்கிரமிக்கப்பட்ட மூன்று இடங்களை மீண்டும் கைப்பற்றிய உக்ரைனிய துருப்புகள்!
05 Sep,2022
உக்ரைன் மீதான படையெடுப்பின் போது, ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட மூன்று இடங்களை மீண்டும் தங்களது படைகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி உறுதிப்படுத்தியுள்ளார்.
உக்ரைனின் தெற்கில் இரண்டு குடியேற்றங்களையும், கிழக்கு உக்ரைனில் மூன்றில் ஒரு பகுதியையும், கிழக்கில் கூடுதலாக ஒரு நிலப்பரப்பையும் கைப்பற்றியதாக அவர் தெரிவித்தார்.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு காணொளி வாயிலாக உரையாற்றிய ஜனாதிபதி, இந்த எதிர்த்தாக்குதலின் வெற்றிக்கு தனது படைகளுக்கு நன்றி தெரிவித்தார்.
மேலும், கிழக்கு டொனெட்ஸ்க் பகுதியில் ஒரு குடியேற்றத்தை ரஷ்ய ஆக்கிரமிப்பில் இருந்து விடுவித்ததற்காக தனது படைகளுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
ஆனால், அவை எந்தெந்த இடங்கள் அல்லது எங்கே என்பதை அவர் துல்லியமாக கூறவில்லை. முன்னதாக ஞாயிற்றுக்கிழமை நடந்த ஒரு கூட்டத்தில் அவரது இராணுவத் தளபதிகள் மற்றும் உளவுத்துறைத் தலைவரிடமிருந்து நல்ல அறிக்கைகள் கிடைத்துள்ளதாக அவர் கூறினார்.
இதை உறுதிபடுத்தும் விதமாக ஜனாதிபதி மாளிகை தலைமை அதிகாரி ஒருவர், உக்ரைனின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில், தங்கள் நாட்டு ராணுவ வீரர்கள் உக்ரேனிய கொடியை உயர்த்தும் படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.
இதனிடையே, ரஷ்ய சார்பு பிரிவினைவாதிகளால் கைப்பற்றப்பட்ட லுஹான்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள லிசிசான்ஸ்க் பகுதியிலும் உக்ரைன் இராணுவ வீரர்கள் முன்னேறியுள்ளனர்.