மிகப்பெரிய டைனோசரின் எலும்புகள் கண்டெடுப்பு..! - 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்திருக்கலாம் என தகவல்
29 Aug,2022
82 அடி நீள டைனோசர் எலும்புகள் போர்ச்சுகலில் கண்டெடுப்பு82 அடி நீள டைனோசர் எலும்புகள் போர்ச்சுகலில் கண்டெடுப்பு
இந்த டைனோசர் விலங்கு உயிர் வாழ்ந்த காலம் சுமார் 150 மில்லியன் ஆண்டுகள், அதாவது 15 கோடி ஆண்டுகள் என ஆய்வாளர்கள் கணக்கிட்டுள்ளனர்.
போர்ச்சுகல் நாட்டில் வசிக்கும் ஒரு நபரின் வீட்டுப் பின்புறத்தில் மாபெரும் டைனோசரின் எலும்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த டைனோசர் சுமார் 82 அடி நீளம் கொண்டதாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கும் நிலையில், ஐரோப்பாவில் கண்டெடுக்கப்பட்ட மிகப் பெரிய டைனோசர் படிமமாக இது உள்ளது.
போர்ச்சுகல் நாட்டின் பொம்பால் என்ற பகுதியில் வசிக்கும் நபர் 2017ஆம் ஆண்டில் தனது இடத்தில் வீடு கட்டுவதற்காக பணிகளை மேற்கொண்ட போது பின்புறத்தில் டைனோசரின் எச்சங்கள் தென்படத் தொடங்கியது. இதை அடுத்து இந்த தகவலை அந்நாட்டின் லிஸ்பன் பல்கலைக்கழக ஆய்வாளர்களிடம் தெரிவித்தார். அதன் அடிப்படையில் ஆய்வாளர்கள் அகழாய்வு பணியை மேற்கொள்ளத் தொடங்கினர்.
இதையடுத்து இந்த ஆய்வில் தற்போது மாபெரும் டைனோசர் ஒன்றின் மார்பு மற்றும் முதுகு பகுதி எலும்புகள் கிடைத்துள்ளன. இந்த டைனோசரின் உயரம் 39 அடி மற்றும் நீளம் 82 அடி என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். இது தொடர்பாக லிஸ்பன் பல்கலைக்கழக ஆய்வுத்துறை முனைவர் எலிசபெத் மலாபியா கூறுகையில், பொதுவாக இது போன்று மாபெரும் விலங்கின் மார்பு பாகத்தின் எலும்புகள் அனைத்தும் கிடைப்பது அரிது. அதன் உண்மையான உருவத்தோற்றத்தை அப்படியே சிதையாமல் இருக்கும் விதத்தில் இந்த அரிய எச்சம் கிடைத்துள்ளது என்றார்.
இந்த விலங்கு உயிர் வாழ்ந்த காலம் சுமார் 150 மில்லியன் ஆண்டுகள், அதாவது 15 கோடி ஆண்டுகள் என ஆய்வாளர்கள் கணக்கிட்டுள்ளனர். இதுவரை கிடைத்துள்ள எச்சங்களில் ஐரோப்பாவின் மிகப் பெரிய டைனோசரின் எச்சம் இதுவே. இந்த எச்சங்களை ஆய்வு செய்வதுடன், மேலும் இங்கு புதிய டைனோசர் எச்சங்கள் கிடைக்கின்றதா என அகழ்வாய்வு பணிகளை தொடர்ந்து வருகின்றனர்.
அன்மையில் அமெரிக்காவின் டெக்சாஸ் பள்ளத்தாக்கில் உள்ள டைனோசர் வேலி பூங்காவில் நதி வற்றிய காரணத்தினால், சுமார் 11 கோடி ஆண்டுகளுக்கு பிந்தைய டைனோசரின் கால் தடங்களை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.