மயிரிழையில் தப்பிய ஐரோப்பா - உக்ரைன் அதிபர் வெளியிட்ட தகவல்
27 Aug,2022
கதிர்வீச்சு அனர்த்தத்தில் இருந்து ஐரோப்பா மயிரிழையில் தப்பியுள்ளதாக உக்ரைன் அதிபர் வெலெடிமீர் ஷெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட ஷப்போறிஸ்ஷியா அணுமின் நிலையத்திற்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால், ஐரோப்பா கதிர்வீச்சு பேரழிவை எதிர்கொண்டது என அவர் கூறியுள்ளார்.
உக்ரைனின் தென் பிராந்தியத்திலுள்ள ஷப்போறிஸ்ஷியா அணுமின் நிலையத்திற்கான மின் விநியோக மார்க்கத்தில் சேதம் ஏற்பட்டதாக உக்ரைன் அதிபர் வெலெடிமீர் ஷெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
எனினும் மீண்டும் உடனடியாக மின்விநியோகம் வழங்கப்பட்டதால், ஷப்போறிஸ்ஷியா அணுமின் உற்பத்தி நிலையத்தை பாதுகாப்பாக இயக்க முடிந்ததாக உக்ரைன் அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
டீசல் மின்பிறப்பாக்கிகள் தானியங்கி முறையில் செயற்பட்டிருக்காத பட்சத்திலும், அணுமின் நிலைய ஊழியர்கள் விரைந்து நடவடிக்கை எடுத்திருக்காத பட்சத்திலும், கதிர்வீச்சு விபத்தின் விளைவுகளை சமாளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கும் என உக்ரைன் அதிபர் கூறியுள்ளார்.
ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலைய வளாகத்திற்கு அருகில் தொடரும் மோதல்கள் கவலைகளை அதிகரிக்கச் செய்துள்ளன. இந்த நிலையில் அணுமின் உற்பத்தி திட்டத்திற்கு அருகில் தீப் பற்றி எரியும் காட்சிகள் செய்மதி நிழற்படங்கள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் எறிகணைத் தாக்குதல்கள் காரணமாகவே இந்தச் சேதம் ஏற்பட்டதாகவும், ரஷ்யா ஐரோப்பாவை அனர்த்தத்தின் விளிம்புக்கு கொண்டுசென்றுள்ளதாகவும் உக்ரைன் அதிபர் குற்றஞ்சாட்டியுள்ளார்.