மலேஷிய மாஜி பிரதமர் நஜீப்புக்கு இன்று முதல் சிறை: மேல்முறையீடு தள்ளுபடி
24 Aug,2022
புத்ரஜயா: மலேஷிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் மீதான ஊழல் வழக்கில் அவருக்கு விதிக்கப்பட்ட 12 ஆண்டு சிறை தண்டனையை அந்நாட்டு உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. இதனையடுத்து அவர் உடனடியாக சிறையில் அடைக்கப்பட்டார்.
மலேஷியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக். ஐக்கிய மலாய் தேசிய கட்சியை சேர்ந்த இவர் பிரதமராக பதவி வகித்த போது, 2009 ம் ஆண்டு அரசு முதலீட்டு நிதி அமைப்பான 1 எம்.டி.பி., நிறுவனத்தில் 4.5 பில்லியன் அமெரிக்க டாலர் ஊழல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அந்நாட்டு ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த வழக்கில், நஜீப் ரசாக்குக்கு 12 ஆண்டு சிறை தண்டனை விதித்து, அந்நாட்டு உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து நஜீப் ரசாக் தரப்பில், மலேஷிய மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, நஜீப் ரசாக்குக்கு உயர் நீதிமன்றம் வழங்கிய தண்டனையை உறுதி செய்யப்பட்டது.
இதனை எதிர்த்து நஜீப் ரசாக் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம் உயர்நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தது. மேலும் நீதிபதிகள் கூறுகையில், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியானது. நஜீப் ரசாக்கின் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு உகந்தது அல்ல. உயர்நீதிமன்றம் மற்றும் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உத்தரவில், தவறானவை என எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.
வழக்கு விசாரணை நியாயமான முறையிலும், சந்தேகத்தை எழுப்பாத வகையிலும் நடந்தது என்பதை நாங்கள் ஒப்பு கொள்கிறோம் எனக்கூறி நஜீப் ரசாக்கின் மனுவை தள்ளுபடி செய்து, 12 ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்தனர். இதனையடுத்து நஜீப் ரசாக்கின் சிறை தண்டனை உடனடியாக துவங்குகிறது.