ரஷ்ய அதிபர் புதினின் வலது கரம்.. அலெக்சான்டர் துகினின் மகள் மர்ம மரணம்
22 Aug,2022
ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் மூளை எனக் கருதப்படும் அலெக்சான்டர் துகின் என்பவரின் மகள் தர்யா துகினா மர்மமான முறையில் கார் வெடித்து உயிரிழந்துள்ளார். ரஷ்யாவை கால் நூற்றாண்டுக்கும் மேலாக ஆட்சி நடத்தி வருபவர் அந்நாட்டின் தற்போதைய அதிபர் விளாதிமிர் புதின். உலகின் மிக சக்தி வாய்ந்த தலைவர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் புதின், முன்னதாக ரஷ்ய உளவுப்படை அதிகாரியாக இருந்தவர்.
பின்னர் அரசியலுக்குள் நுழைந்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய புதின், பிரதமர், அதிபர் என நாட்டின் உச்சபட்ச அதிகாரத்தை தனக்கேற்ப வளைத்து, சட்டத்தையும் தேவைக்கேற்ப மாற்றி வைத்து 20க்கும் மேற்பட்ட ஆண்டுகளாக ரஷ்யாவை தனது கட்டுக்குள் வைத்துள்ளார்.
ரஷ்ய அதிபர் புதினின் மிகுந்த நம்பிக்கைக்குரிய நபராகவும் அவரின் மூளையாகவும் கருதப்படுபவர் அலெக்சான்டர் துகின். இவர் தான் புதினின் பல்வேறு முக்கிய முடிவுகள் அதை செயல்படுத்தும் யுக்திகளுக்கு மூளையாக இருந்து செயலாற்றி வருபவர் என சர்வதேச அரசியல் நோக்கர்கள் கூறிவருகின்றனர். குறிப்பாக 2014ஆம் ஆண்டு கிரீமியா பகுதியை ரஷ்யா கைப்பற்றியதற்குப் பின்னணியில் அலெக்சாண்டர் துகினின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இதையடுத்து அவர் மீது பல்வேறு தடைகளை மேற்கு நாடுகள் விதித்தன. அதேபோல், தற்போது உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போருக்கும் இவரே மூளையாக இருந்து புதினுக்கு ஆலோசனை வழங்குவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இவரது 30 வயது மகள் தரியா துகின் இன்று மர்மமான முறையில் கார் வெடித்து உயிரிழந்துள்ளார். இவர் தனது டொயோட்டோ லேன்ட் க்ருசர் காரில் சென்று கொண்டிருந்த போது கார் திடீரென வெடித்து உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த தரியா துகினும் ரஷ்ய அரசுக்கு ஆதரவாகவும் தந்தை அலெக்சான்டர் துகினுக்கு ஆலோசனை வழங்கி உதவியாளராகவும் பணியாற்றி வந்தார். கடந்த மாதம் தரியா துகின் மீது பிரிட்டன் அரசு தடை உத்தரவு பிறப்பித்தது. இந்த சம்பவத்திற்கு பின்னணியில் வெளிநாட்டு சதி உள்ளதா என்ற கோணத்தில் ரஷ்ய அரசு விசாரணை நடத்தி வருகிறது.