சீனாவில் 60 ஆண்டுகளில் இல்லாத வெப்பம்.. பல மாகாணங்களுக்கு ரெட் அலர்ட் - நிலைமையை சமாளிக்க செயற்கை மழை?
22 Aug,2022
சீனாவில் அதிகரிக்கும் வெப்பநிலை காரணமாக கடந்த சனிக்கிழமை அன்று பல மாகாணங்களில் நான்கு அடுக்கு எச்சரிக்கையான சிவப்பு நிற எச்சரிக்கையை சீனா வானிலை மையம் விடுத்துள்ளது.
சீனாவில் கன்சு, ஷான்சி, ஹெனான், அன்ஹுய் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை அன்று வெப்ப நிலை அதிகரிக்கும் என்று எச்சரிக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து ஷான்சி, சிச்சுவான், சோங்கிங், ஹூபே, ஹுனான், அன்ஹுய், ஜியாங்சி மற்றும் ஜெஜியாங் பகுதிகளில் வெப்ப அளவு 40 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கக்கூடும் என்று சீன வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து வெப்பநிலையை எதிர்கொள்ள உள்ளூர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மக்களை தேவையில்லாமல் வெளியில் வரவேண்டாம் என்றும் தீ விபத்துகள் வராமல் தடுக்க முன்னெச்சரிக்கையாக இருந்துகொள்ளவும் அறிவுறுத்தியுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை சீனாவின் பல மாகாணங்களில் 35 டிகிரி செல்சியஸ் தாண்டி வெயில் கொளுத்தியது. இந்த நிலையில் மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்ட நிலையில் தற்போது சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
சீனாவின் வானிலை ஆய்வு மைய தகவலின் படி சீனாவின் மத்திய, தெற்கு மற்றும் தென்மேற்கு பகுதிகளில் வெப்ப நிலை அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் பல பகுதிகளில் வறட்சிக்கான அபாயம் தோன்றியுள்ளது. வெப்பத்தின் காரணத்தினால் காட்டு தீ ஏற்படாமல் இருக்கவும் கண்காணிக்கப்படுகிறது.
தேவைப்பட்டால் செயற்கையான மழையையும் கொண்டுவர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர். வானிலை மையத்தின் தகவலின் படி இந்த மாதம் இறுதிக்குள் வெயில் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொளுத்தும் வெப்பநிலைக்கு மத்தியில் சீனா முதல் தேசிய வறட்சி அவசரநிலையை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.