நடுவானில் திடீரென திறந்த விமான கதவு...அடுத்த நொடியே பயணிகள் செய்த காரியம்!
18 Aug,2022
நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தின் கதவுகள் தானாகவே திடீரென திறந்த நிலையில், இரண்டு பயணிகள் அதனை பிடித்துக்கொண்டிருக்கும் அதிர்ச்சி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
விமானத்தில் பயணிப்பது என்பது ஒருவகையான சாகச பயணம் தான். என்ன தான் நவீன தொழில்நுட்பங்கள், பாதுகாப்பு உபகரணங்கள் என எல்லாம் வந்தாலும், விமானத்தில் ஏறி இருக்கையில் அமரும் போது உள்ளுக்குள் இருந்து வரும் பயத்தை அடக்கமுடியாது. ஏறிய நொடியிலிருந்து இறங்க வேண்டிய இடம் வரை மனம் ‘திக்கு திக்கென’ இருக்கும். கரணம் தப்பினால் மரணம் என்பது கயிறு மேல் நடப்பதற்கு மட்டுமல்ல விமான பயணத்திற்கும் பொருந்தும்.
பல்லாயிரக்கணக்கான அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் போது விமானத்தில் ஏற்படும் ஒரு சிறிய கோளாறும், ஆயிரக்கணக்கான பயணிகளின் பயணத்தை முடிவுக்கு கொண்டு வந்துவிடலாம். அதனால் தான் விமானம் புறப்படுவதற்கு முன்பு பல கட்ட சோதனைகள் மற்றும் வானிலை நிலவரங்கள் குறித்து ஆராயப்படுகின்றன. இந்நிலையில், நடுவானில் பறந்து கொண்டிருக்கும் விமானத்தில் கதவு திடீரென திறந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
ஏப்ரல் 14ம் தேதி அன்று ஏக்கரில் உள்ள ஜோர்டாவோ விமான நிலையத்தில் இருந்து ரியோ பிராங்கோ நோக்கி புறப்பட்ட விமானத்தின் கதவு நடுவானில் பறந்து கொண்டிருக்கும் போது திறந்துள்ளது. வணிக மற்றும் பிரேசில் ராணுவத்தால் பயன்படுத்தப்படும் பிரேசிலிய இரட்டை-டர்போபிராப் இலகுரக விமானமான ‘எம்ப்ரேயர் 110 பண்டேரான்டே’ விமானத்தில் தான் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
நடுவானில் பறந்து கொண்டிருந்த போது விமானத்தின் கதவு திறந்ததைக் கண்ட பயணிகள் இருவர், உடனடியாக அதனை நன்றாக இருக்கமாக மூடி, பிடித்துக் கொள்கின்றனர். பிற பயணிகள் இப்படிப்பட்ட திகிலான காட்சியைக் கண்டும், பீதி அடையாமல் அமைதியாக இருப்பது வீடியோவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. விமானம் தரையிறங்க தேவைப்பட்ட 20 நிமிடங்கள் வரையிலும், பயணிகள் இருவரும் அதன் கதவை நன்றாக பிடித்திருந்ததாக கூறப்படுகிறது.
கதவின் ஹேண்ட்ரெயில் ப்ரொப்பல்லரைத் தாக்கியதால் விமானி இடதுபுற இன்ஜினை அணைந்துள்ளார். ஒரே ஒரு இன்ஜினை பயன்படுத்தி மட்டுமே விமானம் தரையிறங்கியுள்ளது. விமானியின் இந்த செயலால் பெரும் விபத்து தடுக்கப்பட்டுள்ளது. கதவின் சப்போர்ட் கேபிள் துண்டானதால் தான் திடீரென திறந்ததாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
விமானத்தில் பயணிகளுக்கு ஏதோ விநோதமான சத்தம் கேட்டுள்ளது, அது என்னவென்று அறிய முன் இருக்கையில் இருப்பவர்கள் கதவிற்கு அருகே சென்ற போது தான் அது திறக்க ஆரம்பித்துள்ளது. இதனை உடனடியாக கவனித்த இரு பயணிகள் கதவு திறக்க முடியாத படி இறுக்கமாக மூடி, சக பயணிகளின் உயிரைக் காப்பாற்றியுள்ளனர். தற்போது கிடைத்துள்ள தகவல்களின் படி விமானம் தரையிறங்கியதும் பழுது நீக்கம் செய்யப்பட்டு, மீண்டும் பறக்க தயாரானதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.