ரயில் பயணம் இலவசம்... ஸ்பெயின் அரசின் அதிரடி அறிவிப்புக்கு காரணம் என்ன.?
24 Jul,2022
ஐரோப்பாவில் அதிகரித்து வரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், ஸ்பெயின் அரசாங்கம் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஸ்பெயின் முழுவதும், பணவீக்க விகிதங்கள் விரைவாக அதிகரித்து வருகிறது. அரசுக்கு சொந்தமான சேவையில் பொதுப் போக்குவரத்துக்கான கட்டணங்கள் பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளன. எனினும் பயணிகளுக்கு வசதியாக, ரயில் பயணத்தில் 100 சதவீதம் தள்ளுபடி வழங்க ஸ்பெயின் அரசு முடிவு செய்துள்ளது. செப்டம்பர் மாதம் முதல் பொது ரயில் நெட்வொர்க்கான ரென்ஃபே மூலம் இயக்கப்படும் பல்வேறு ரயில்களில் பயணிகள் கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், செப்டம்பர் 1 முதல், நெட்வொர்க்கின் பொதுச் சேவைகளான 'Cercanias, Rodalies மற்றும் Media Distance' மூலம் இயக்கப்படும் ரயில்களுக்கான பயண டிக்கெட்டுகள் இந்த ஆண்டு இறுதி வரை இலவசம்” என அறிவித்துள்ளார். இதில் நீண்ட தூரப் பயணங்களும் மற்றும் ஒற்றை பயண டிக்கெட்டுகளும் அடங்கும்.
ஏற்கெனெவே, போக்குவரத்து கட்டணத்தில் 30 சதவீதம் குறைக்கப்படுவதாக ஸ்பெயின் அரசு அறிவித்துள்ளது. இதில் மெட்ரோக்கள், பேருந்துகள் மற்றும் டிராம்கள் அடங்கும். பயணிகள் சேவைகள் மற்றும் 300 கிமீக்கு குறைவான, நடுத்தர தூர வழிகளில் பல பயணங்களுக்கு இலவச ரயில் பயண திட்டம் பொருந்தும். ஸ்பானிஷ் சீசன் டிக்கெட் வைத்திருப்பவர்கள் முக்கியமாக இந்தத் திட்டத்தில் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் பல பயண ரயில் டிக்கெட்டுகளை வாங்கும் சுற்றுலாப் பயணிகளும் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்பெயின் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் "எரிசக்தி மற்றும் எரிபொருள் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வரும் அசாதாரண சூழ்நிலைகளுக்கு மத்தியில், பாதுகாப்பான, நம்பகமான, வசதியான, பொருளாதார மற்றும் நிலையான போக்குவரத்து வழிமுறைகளுடன் தினசரி பயணத்திற்கு உத்தரவாதம் அளிக்க இந்த வகை கூட்டுப் பொதுப் போக்குவரத்தை அதிகபட்சமாக பயன்படுத்த இந்த நடவடிக்கை ஊக்குவிக்கப்படுகிறது” எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐரோப்பாவில் நிலவி வரும் பணவீக்கம் காரணமாகவே ஸ்பெயின் அரசு இந்த மாதிரியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்படி இலவச பயணம் குறித்த அறிவிப்பை ஸ்பெயின் மட்டுமல்ல ஜெர்மனியும் வெளியிட்டுள்ளது. கடந்த மே மாதம் ஜெர்மன் அரசு தனது தேசிய இரயில் நிறுவனமான டியூட்ஸ்செ பஹன் (Deutsche Bahn) ஜூன் முதல் ஆகஸ்ட் இறுதி வரை ஒரு முழு மாத பயணத்தை அளிக்கும் €9 விலையில் ஒரு டிக்கெட்டை அறிமுகப்படுத்தியது. மக்களிடையே ரயில் பயணத்தை அதிகரிக்க விதமாக வரம்பற்ற மாதந்திர பொது போக்குவரத்து டிக்கெட் திட்டத்தை ஜெர்மன் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த டிக்கெட்டை ஐரோப்பா முழுவதும் உள்ளூர் மற்றும் பிராந்திய போக்குவரத்தில் பயன்படுத்தப்படலாம்.