எரிவாயு விநியோகத்தை ஆரம்பித்த ரஷ்யா
22 Jul,2022
ஐரோப்பிய நாடுகளுக்கு எரிவாயு விநியோகம் செய்யும் நடவடிக்கையை ரஷ்யா இன்று மீண்டும் ஆரம்பித்துள்ளது.
நோர்ட் ஸ்ட்ரீம் 1 (Nord Stream 1) எனும் மிகப் பெரிய குழாய்த் தொகுதி ஊடான விநியோகம், பழுதுபார்த்தல் நடவடிக்கைகளுக்காக 10 நாட்களுக்கு இடைநிறுத்தப்பட்டிருந்தது.
அதேவேளை ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான முறுகல் நிலைக்கு மத்தியில், இக்குழாய் ஊடான எரிவாயு விநியோகத்தை ரஷ்யா மீள ஆரம்பிக்காமல் விடக்கூடும் எனவும் சிலர் கருதினர்.
ஐரோப்பாவுக்கு ரஷ்ய எரிவாயு விநியோகம் கிடைக்காவிட்டால் எதிர்வரும் 7 மாதங்களுக்கு எரிவாயு பாவனையை 15 சதவீதத்தால் குறைக்க வேண்டும் என தனது அங்கத்துவ நாடுகளை ஐரோப்பிய ஒன்றியம் நேற்று வலியுறுத்தியிருந்தது.
இந்த நிலையில் ஐரோப்பிய நாடுகளுக்கு மீண்டும் எரிவாயு விநியோகத்தை ரஷ்யா இன்று ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.