ஜெர்மனியின் முனிச் நகரில் சமையல் எண்ணெயை கொடுத்து, அதற்கு பதிலாக அதே அளவு பீர் வாங்கி கொள்ளலாமென பார் ஒன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
உலகளவில் சூரியகாந்தி எண்ணெய் ஏற்றுமதியில் உக்ரைன் மற்றும் ரஷ்யா 80 சதவீத பங்களிப்பை வழங்குகின்றன. உக்ரைன் மீது ரஷ்யா போர் நடவடிக்கையை தொடங்கியதால் வினியோகம் பாதிக்கப்பட்டது. இதனால் ஜெர்மனி உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகள், சமையல் எண்ணெய் பற்றாக்குறையை எதிர்கொண்டு வருகின்றன.
போர் நடவடிக்கை துவங்கியதில் இருந்து , பெரும்பாலான சூப்பர் மார்க்கெட்களில் எண்ணெய் வித்து மற்றும் சமையல் எண்ணெய் இருப்பதாக கண்ணில் படவில்லை. மேலும் பல கடைகளில் ஒரு வாடிக்கையாளருக்கு இத்தனை சமையல் எண்ணெய் பாட்டில்கள் தான் கெடுபிடிகளுடன் விற்பனை செய்தன.
இந்நிலையில் சமையல் எண்ணெய் பற்றாக்குறையை சமாளிக்க, ஜிசிங்கர் பார் மேலாளர்கள் ஓர் உற்சாக அறிவிப்பை வெளியிட்டனர். அதாவது, சூரியகாந்தி எண்ணெய் ஒரு லிட்டர் அளித்து, அதே அளவு பீரை பெற்றுகொள்ளலாம் என்பது தான். இந்த அறிவிப்பு குறித்த செய்தி, இணையத்தில் பரவி பேசுபொருளாக மாறியுள்ளது.
மதுபான விடுதி மேலாளர் எரிக் ஹாஃப்மேன் கூறுகையில்,
எங்களது கிச்சனில் சமையல் எண்ணெய் இருப்பு முற்றிலும் தீர்ந்துவிட்டதை தெரியவந்தததை, தொடர்ந்து நாங்கள் இந்த புதிய ஐடியாவை கண்டுபிடித்தோம். எண்ணெய் கிடைப்பது மிகவும் கடினமாக உள்ளது. உங்களுக்கு ஒரு வாரத்திற்கு 30 லிட்டர் எண்ணெய் தேவைப்படின், 15
லிட்டர் மட்டுமே கிடைக்கிறது.
இது தொடரும்பட்சத்தில், கட்லட் போன்று சிக்கனை ( Schnitzel) பொறித்து விற்பனை செய்ய முடியாது. இதுவரை வாடிக்கையாளர்கள் மூலம் 400 லிட்டர் எண்ணெய் கிடைத்துள்ளது
இவ்வாறு அவர் கூறினார்..
வெளிச்சந்தையில், ஒரு லிட்டர் பீரின் விலை 7 யூரோக்கள். ஆனால் ஒரு லிட்டர் சூரியகாந்தி எண்ணெய் விலை 4.5 யூரோக்கள் தான் என்பதால் சிறப்பு சலுகையை பயன்படுத்தி கொள்ள பாருக்கு, வாடிக்கையாளர்கள் கூட்டம் கூட்டமாக படையெடுத்து வருகின்றனர்.
மனிதாபிமான உதவிகளை செய்ய உக்ரைன் சென்ற மோரிட்ஸ் பாலர் என்பவர் 80 லிட்டர் சமையல் எண்ணெய் வாங்கியுள்ளார். அதனை பாரில் கொடுத்து பீர் வாங்கி நண்பர்களுடன் பிறந்தநாளை கொண்டாடி தீர்த்துள்ளார். இது குறித்து கேட்டதற்கு, 'குறைந்த விலையில் பீர் கிடைப்பதுடன், ஜிசிங்கருக்கு உதவியது போல ஆச்சு' என்கிறார்.