ஒரு நபருக்கு கொரோனா வந்ததால் 3 லட்சம் பேரை லாக்டவுனில் வைத்த சீனா!
14 Jul,2022
சீனாவின் ஒரு நகரத்தில் ஒரே ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால், 3.2 லட்சம் மக்கள் லாக்டவுனில் வைக்கப்பட்டுள்ளனர்.
உலகின் மிக அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக சீனா உள்ளது. இந்நாட்டில் தான் 2019ஆம் ஆண்டு முதல்முதலாக கோவிட்-19 பாதிப்பு கண்டறியப்பட்டது. தற்போது சீனாவில் கோவிட் பரவலை தடுக்க ஜீரோ கோவிட் பாலிசி(Zero Covid Policy) என்ற நடைமுறை பின்பற்றப்படுகிறது.
அதன்படி, ஒன்று, இரண்டு பேருக்கு கோவிட் பாதிப்பு ஏற்பட்டாலும், அந்நாட்டு அரசு ஒட்டுமொத்த நகரத்திற்கே லாக்டவுன் அறிவித்து, அனைவரையும் பரிசோதனை செய்து வருகிறது. இந்த நடைமுறையால் அந்நாட்டின் குடிமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர் எனவும், பொருளாதாரமும் பெரும் பாதிப்புக்குள்ளாகிறது எனவும் புகார் எழுந்து வருகிறது. கோவிட் முதல் அலையை சமாளித்து தப்பிய சீனா, தற்போது ஓமைக்ரான் அலையை சமாளிக்க முடியாமல் திணறிவருகிறது.
இந்நிலையில் அந்நாட்டின் வுகேங்க் என்ற நகரில் ஒரு நபருக்கு தற்போது கோவிட் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சுமார் 3 லட்சத்து 20 ஆயிரம் மக்கள் வசிக்கும் அந்நகரத்திற்கு ஒட்டுமொத்தமாக லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. நோய் பரவல் தடுப்பு நோக்கில் அந்நகரத்தை சேர்ந்த யாரும் வரும் வியாழக்கிழமை மதியம் வரை வீட்டை விட்டு வெளியே வர அனுமதி இல்லை என அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் மிகப் பெரிய உருக்கு ஆலை இந்த வுகேங்க் நகரில் தான் உள்ளது என்பதால் உருக்கு ஏற்றுமதி பெருமளவில் பாதிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
சீனாவில் பல்வேறு நகரங்களில் இது போன்ற லாக்டவுன் கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. அந்நாட்டின் தினசரி பாதிப்பு 300இல் இருந்து 400 ஆக உள்ள நிலையில், ஒட்டுமொத்தமாக சுமார் 25 கோடி மக்கள் லாக்டவுன் கட்டுப்பாடுகளை அனுபவித்து வருகின்றனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்நாட்டின் முன்னணி தொழில் நகரமான ஷாங்காய் இந்த வருட தொடக்கத்தில் இரு மாத லாக்டவுனில் இருந்தது. பாதிப்பு குறைந்ததும் மெல்ல தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், அங்கு மீண்டும் பாதிப்பு எண்ணிக்கை உயரத் தொடங்கியதால் ஷாங்காய்வாசிகள் லாக்டவுன் அச்சத்தில் உள்ளனர்.