ஐரோப்பிய நாடுகளை முடக்கபுதிய ஆயுதத்தை பயன்படுத்த போகும் ரஷ்யா-!
12 Jul,2022
ரஷ்யா – உக்ரைன் மத்தியிலான போர் இன்னும் முடியாத நிலையிலும், உக்ரைன் அரசு தன்நாட்டு எல்லைப் பகுதியில் இருக்கும் மக்களைப் படிப்படியாகப் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றி வரும் பணிகளைத் தீவிரமாகச் செய்து வருகிறது.
இதற்கிடையில் விளாடிமீர் புதின் உக்ரைன் நாட்டிற்கு ஆதரவு அளிக்கும் ஐரோப்பிய நாடுகளை மொத்தமாக முடக்கவும், எவ்விதமான வர்த்தகத்தையும் செய்ய முடியாத அளவிற்குக் கார்னர் செய்ய முக்கியமான ஆயுதத்தை எடுத்துள்ளார்.
ரஷ்யா – உக்ரைன் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக நிற்கும் ஐரோப்பிய நாடுகளுக்குக் கச்சா எண்ணெய் சப்ளையை உறுதி செய்யும் கஜகஸ்தான் கச்சா எண்ணெய் விநியோக பாதையைத் தடை செய்யும் முயற்சியில் விளாடிமீர் புதின் தலைமையிலான ரஷ்ய அரசு இறங்கியுள்ளது.
கருங்கடல் பகுதியில் இருக்கும் Novorossiysk நகர நீதிபதி எண்ணெய் கசிவு மற்றும் சில முக்கிய விதிமுறைகளை மீறியதற்காகக் காஸ்பியன் பைப்லைன் கச்சா எண்ணெய் விநியோகத்தை 30 நாட்களுக்கு நிறுத்த உத்தரவிட்டு உள்ளார். இதேபோல் இந்தத் தவறுகளைச் சரி செய்ய நவம்பர் மாதம் வரையில் கால அவகாசம் கொடுத்துள்ளார்.
காஸ்பியன் பைப்லைன் வாயிலாக விநியோகம் செய்யப்படும் கச்சா எண்ணெய் அளவில் 90 சதவீதம் ரஷ்ய கச்சா எண்ணெய், 10 சதவீதம் மட்டுமே கஜகஸ்தான் கச்சா எண்ணெய். இந்நிலையில் இதன் விநியோகத்தை நிறுத்தின் ஐரோப்பாவில் பல நாடுகள் முடங்குவது மட்டும் அல்லாமல் ரஷ்யாவின் வர்த்தகமும் பாதிக்கும்.
ஆனால் ரஷ்யாவுக்கு எதிராகத் திரும்பியுள்ள ஐரோப்பிய நாடுகளைப் பழிவாங்க இதைவிடப் பெரிய வாய்ப்பு கிடைக்காது என்பதால் தான் இது ரஷ்யாவுக்கு ஆயுதம் எனக் கூறப்படுகிறது. மேலும் விளாடிமீர் புதின் அரசு நீதிமன்றத்தின் மூலம் தனக்கு வேண்டியதைச் சாதித்துக்கொள்வது புதியது இல்லை. அந்த வகையில் தான் 30 நாள் சப்ளை தடை உத்தரவைப் பெற்றுள்ளதாகவும் விமர்சனம் வருகிறது.
காஸ்பியன் பைப்லைன் வாயிலாகத் தினமும் 1.5 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் விநியோகம் செய்யப்படுகிறது, இந்த வர்த்தகத்தை ரஷ்யா வேறு நாடுகளுக்கு மாற்றுவதும் கஷ்டம், அதேவேளையில் 1.5 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு நிலவினால் ஒரு நாட்டின் நிலை மிகவும் மோசமாகிவிடும்.
இதனால் பாதிப்பு இரண்டு தரப்புக்கும் உள்ளது என்பது தெளிவாகத் தெரியும் நிலையில், உக்ரைன் நாட்டிற்கு உதவி செய்து வரும் ஐரோப்பிய நாடுகள் பின் வாங்குமா என்ற கேள்வி எழுகிறது. இதேவேளையில் அமெரிக்கா கூடுதலாக உற்பத்தியைச் சந்தைக்குக் கொண்டு வர OPEC நாடுகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.