1,000 பன்றிகள் பட்டினி மரணம் - பெண் நிர்வாகி கைது
07 Jul,2022
அமெரிக்காவில் 1,000க்கும் மேற்பட்ட பன்றிகள் இறப்புக்கு காரணமாக இருந்த குற்றத்திற்காக 33 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்நாட்டின் ஐஓவா பகுதியில் அருகருகே இரு பெரிய பன்றி பண்ணை ஒன்று உள்ளது. இதை எலானா லாபேர் என்ற 33 வயது பெண் நிர்வகித்து வருகிறார்.
இந்நிலையில், இந்த பண்ணையில் நிர்வாகிக்கும் எலானா அப்பகுதி காவல்துறையினரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், பண்ணையின் எலக்ட்ரிக் பிரேக்கர்களை யாரோ ஒரு நபர் அனைத்து விட்டார். இதன் காரணமாக பண்ணையில் ஆயிரக்கணக்கான பன்றிகள் இறந்து விட்டன எனப் புகாரில் தெரிவித்துள்ளார்.
புகாரை அடுத்து சம்பவயிடத்திற்கு வந்த காவல்துறை, அங்கு ஆய்வு செய்து விசாரித்தது. இறந்த ஆயிரம் பன்றிகளை விசாரணை அதிகாரிகள் பார்வையிட்ட போது, அவை உயிரிழந்து ஒரு வாரம் இருக்கும் என்ற சந்தேகம் எழுந்தது. இதையடுத்து புகார் அளித்த பண்ணையின் நிர்வாகி எலானாவை துருவித் துருவி விசாரித்துள்ளனர். அப்போதுதான், உண்மைகள் வெளிவரத் தொடங்கியுள்ளது. அதில், இந்த பன்றிகள் ஒரு வாரத்திற்கு முன்னரே இறந்து விட்டது எலனாவுக்கு தெரியும் என்பதும், ஆனால், தனக்கு என்ன செய்வது என்று அறியாமலேயே இத்தனை நாள் இதை மறைத்து வைத்துள்ளார் என்பதை ஒப்புக் கொண்டுள்ளார்.
இந்த பெண்ணின் முன்னுக்குப் பின் முரணான வாக்குமூலத்தால் காவல்துறைக்கு சந்தேகம் வலுக்கவே, பண்ணை முழுவதும் ஆய்வு செய்துள்ளது. அப்போது தான், அந்த பெண் அங்கிருந்த பன்றிகளுக்கு ஒரு வார காலமாக உணவு மற்றும் நீர் வழங்கவில்லை என்றும், பட்டினியின் காரணமாகவே இந்த பன்றிகள் உயிரிழந்துள்ளன என்ற அதிர்ச்சி தகவல் வெளியே வந்தது.