கண்ணி வெடிகளை அகற்றினால் கருங்கடலில் கோதுமை செல்லலாம்!
13 Jun,2022
ரஷ்யாவும் துருக்கியும் கருங்கடலில் ஒரு பாதுகாப்பான கடல் வழித்தடத்தை உருவாக்குவதற்கு ஆதரவாக புதன்கிழமை உறுதி கொடுத்தன. இதனால் உலக உணவு நெருக்கடி அதிகரித்து வரும் நிலையில் உலக சந்தைகளுக்கு உக்ரைன் தன் தானியங்களை ஏற்றுமதி செய்ய முடியும். ஆனால் உக்ரைனின் கருங்கடல் துறைமுகங்களில் கண்ணிவெடிகள் அகற்றப்பட வேண்டும் என்று ரஷ்யா கோரியது. மேலும் உக்ரைன் ஏற்றுமதியை அனுமதிப்பதற்காக ரஷ்யாவிற்கு எதிரான மேற்கத்திய பொருளாதாரத் தடைகளை தளர்த்த வேண்டும் என்று துருக்கி கோரிக்கை வைத்துள்ளது.
உக்ரேனின் கருங்கடல் துறைமுகங்களை விடுவிப்பதற்கும், துறைமுகங்களில் தேங்கியிருக்கும் 22 மில்லியன் டன் தானியங்களை உலக சந்தைக்கு அனுப்பவது குறித்து பேசவும், துருக்கிய வெளியுறவு மந்திரி மேவ்லூத் சவுஸோக்லு(Mevlut Cavusoglu) ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவை துருக்கி தலைநகர் அங்காராவில் சந்தித்தார்.
உக்ரைன் மீதான ரஷ்ய போர் தொடங்கியதிலிருந்து உக்ரைனின் ஏற்றுமதிகள் கிடப்பில் உள்ளன. அதை சரி செய்யும் நோக்கில் தான் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த சந்திப்புக்கு காரணமான உக்ரைன் நாட்டின் பிரதிநிதிகள் யாரும் இந்த சந்திப்பிற்கு அழைக்கப்படவில்லை.
கோதுமை, சோளம் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றின் உலகின் மிகப்பெரிய ஏற்றுமதி நாடுகளில் உக்ரைன் ஒன்றாகும். ஆனால் போர் மற்றும் அதன் துறைமுகங்களை ரஷ்யா முற்றுகையிட்டதால், அந்த வணிகத்தின் பெரும்பகுதி நிறுத்தப்பட்டு, பல வளரும் நாடுகளுக்கு அனுப்படும் உணவு பொருட்களை தேக்கி அந்நாட்டின் உணவுத் தேவையை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது.
பாதுகாப்பான தானிய ஏற்றுமதியை அனுமதிக்க கருங்கடல் துறைமுகமான ஒடேசாவிற்கு அருகிலுள்ள பகுதியில் இருந்து கண்ணிவெடிகளை அகற்றுமாறு உக்ரைனை ரஷ்யா வலியுறுத்தியுள்ளது. ரஷியா உக்ரைனின் முக்கிய துறைமுகமான ஒடேசா மீது தாக்குதல் நடத்தாது என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உறுதியளித்துள்ளார். ஆனால் புடின் இந்த ஆண்டின் தொடக்கத்தில் உக்ரைனை ஆக்கிரமிக்கும் திட்டம் இல்லை என்று சொல்லி அதை மீறியுள்ளார். அதனால் இந்த முறை கொடுக்கும் உறுதியில் உக்ரைனுக்கு நம்பிக்கை இல்லை.
அதோடு கண்ணி வெடிகள் அகற்றப்பட்டால் கப்பல்கள் சுதந்திரமாக அங்கிருந்து வெளியேறுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்றும் ரஷ்ய தூதர் உறுதியளித்துள்ளார்.ஆனால் உக்கரைக்கு வரும் கப்பல்களில் சரக்கு, தானியங்கள் மட்டும் உள்ளனவா அல்லது ஆயுதங்களும் வருகிறதா என்று ரஷிய சோதனை செய்யும். அதற்கான அதிகாரம் எங்களுக்கு உண்டு என்று ரஷியா கூறி வருகிறது.
"கருங்கடலில் சரக்கு கலன்கள் இயக்கம் மற்றும் உக்ரைன் துறைமுகங்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்க துருக்கிக்கு போதுமான சக்தி இல்லை" என்று உக்ரேனிய தானிய யூனியன் தலைவர் செர்ஹி இவாஷ்செங்கோ புதன்கிழமை கூறினார். அது மட்டுமின்றி கடல் கண்ணிவெடிகளை அகற்ற குறைந்தது 3 முதல் 4 மாதங்கள் ஆகும் . இந்த கண்ணிவெடிகளை வைத்தவர்கள் நாங்கள் அல்ல. அதுவும் ரஷியர்கள் தான் என்றும் கூறியுள்ளார்.
துருக்கிக்கு ரஷ்ய உதவி தேவைப்படுவதால் அவர்களுக்கு ஆதரவாக செயல்பட முயல்வதாக மத்திய கிழக்கு ஜனநாயகத்திற்கான திட்டத்தில் துருக்கியின் திட்ட ஒருங்கிணைப்பாளர் மெர்வ் தஹிரோக்லு கூறியுள்ளார்.இதனால் ரஷியாவின் தானியங்களும், உரங்களும் கருங்கடல் வழியாக வணிகம் செய்ய வாய்ப்புண்டு. அதனைக் காரணமாக கொண்டே உக்ரைன் கடல்வழிகளையும் ஆக்கிரமிக்க முயலலாம்.