உக்ரைனின் கிழக்கு டான்பாஸ் பகுதியில் ரஷ்ய ராணுவம் நடத்திய TOS-1A ரக ஷெல் தாக்குதல்கள் தொடர்பான வீடியோ ஆதாரங்கள் வெளியாகி பொதுமக்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 92வது நாளாக நடைப்பெறும் ரஷ்யாவின் இந்த போர் நடவடிக்கையில் உக்ரைனின் பெரும்பாலான நகரங்கள் ஏவுகணை தாக்குதல் மற்றும் பீரங்கி தாக்குதலால் முழுமையாக சிதைக்கப்பட்டுள்ளது.
மேலும் ரஷ்ய கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டு பகுதியான லுஹான்ஸ்க், டொனெட்ஸ்க் மற்றும் மரியுபோல் ஆகிய நகரங்களையும் ரஷ்ய ராணுவம் முழுமையான தங்களது கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்துள்ளது.
ரஷ்யாவின் போர் நடவடிக்கையானது உக்ரைனின் மேற்கு மற்றும் மையப் பகுதிகளில் இருந்து விலகி, தற்போது அதன் கிழக்கு பகுதியான டான்பாஸ் பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ளது.
அந்தவகையில், உக்ரைனின் கிழக்கு டொனெட்ஸ்க் பிராந்தியத்தின் நோவோமிகைலிவ்கா(Novomykhailivka)பகுதியில் இருந்த உக்ரைனிய துருப்புகள் மீது ரஷ்ய ராணுவத்தினர் மிகவும் பயங்கரமான TOS-1A ரக வெடிகுண்டு தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இந்தநிலையில் இதுத் தொடர்பான வீடியோ காட்சியை இணையத்தில் பகிர்ந்துள்ள உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம், ரஷ்யா ராணுவம் உக்ரைனிய துருப்புகள் மீது மிகவும் பயங்கரமான TOS-1A ரக வெடிகுண்டு தாக்குதலை அரங்கேற்றியுள்ளனர் என தெரிவித்துள்ளது.
அத்துடன் இதுவே 21 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய மற்றும் மிகக் கொடூரமான போர் நடவடிக்கை எனவும் தெரிவித்துள்ளது.
உக்ரைனின் நோவோமிகைலிவ்கா பகுதியில் ரஷ்ய ராணுவம் பயன்படுத்திய TOS-1A ரக வெடிகுண்டுகள் தெர்மோபரிக் ஆயுதங்கள் என்றும் சில சமயங்களில் வெற்றிட குண்டுகள் என்றும் அழைக்கப்படுகின்றன.
இவை குண்டு விழுந்த இடத்தை சுற்றியுள்ள காற்றில் இருந்த ஆக்ஸிஜனை உள் இழுத்து மிக உயர்ந்த ஆற்றல் வெடிப்பு நிகழ்வை ஏற்படுத்தகூடிய வல்லமைப்பெற்றது என்பது குறிப்பிடதக்கது.
ரஷ்ய உக்ரைன் போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில் உக்ரைனுக்கு நீண்ட தூர ரொக்கெட் ஏவுகணை அமைப்புகளை அனுப்ப அமெரிக்கா தயாராகி வருகிறதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது அமெரிக்கா வழங்கும் ஆயுதங்களில் குறிப்பிடத்தக்க அடுத்தகட்ட படியாக இருப்பதாக, CNN செய்தி வெளியிட்டுள்ளது.
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் வேண்டுகோளைத் தொடர்ந்து, நூற்றுக்கணக்கான மைல்களுக்கு அப்பால் ரொக்கெட்டுகளை சரமாரியாகச் செலுத்தக்கூடிய இத்தகைய அமைப்பு உக்ரைனுக்கு கிடைக்கவுள்ளது.
இந்நிலையில் அமரிக்கா வழங்கவுள்ள மல்டிபிள் லாஞ்ச் ரொக்கெட் சிஸ்டம்ஸ் (Multiple Launch Rocket Systems) உக்ரைனின் ஆயுதப் படைகளின் வரம்பை வியத்தகு முறையில் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகின்றது.
உக்ரேனில் ரஷ்யா தோற்கடிக்கப்பட வேண்டும் அல்லது மோதல் மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கும் என்று உக்ரேனிய பேச்சுவார்த்தையாளரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான Mykhailo Podolyak எச்சரித்துள்ளார். உக்ரேனிய தொலைக்காட்சியில் பேசிய Mykhailo Podolyak, எதிரி தோற்கவில்லை என்றால், இழந்த பிரதேசத்தை மீட்டெடுக்க, பதிலடி கொடுக்க முற்படும் ரஷ்யாவின் கொள்கையும் பேரினவாதமும் பெருகும் என்று எச்சரித்தார்.
இது மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கும் என்றும், இதுகுறித்து மேற்கத்திய நாடுகள் அறிந்திருப்பதாகவும், இதனால் அவர்கள் கூடுதல் ஆயுதங்களை வழங்குவதற்கு வழிவகுக்கும் என்றும் Mykhailo Podolyak கூறினார்.
பிப்ரவரி மாதம் இறுதியிலிருந்து உக்ரைன் மீது படையெடுத்து வரும் ரஷ்யா, போரில் சமீபத்தில் நாட்களாக பின்னடைவை சந்தித்தது.
அதேமசமயம், மரியுபோல், கார்கிவ் நகரங்களை ரஷ்யா தொடர்ந்து அதன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
இதனிடையே, உக்ரைனின் முக்கிய நகரங்களைக் கைப்பற்ற ரஷ்யா முயற்சித்து வருவதால், இப்போது கிழக்கு உக்ரைனில் தாக்குதல்கள் தீவிரமடைந்து வருகின்றன.
உக்ரைன், பின்லாந்து, ஸ்வீடன் மற்றும் ஜார்ஜியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய நோட்டோ பாதுகாப்பு அமைச்சர்களின் பேச்சுவார்த்தை கூட்டம் ஜூன் 15 மற்றும் 16ம் திகதிகளில் நடைப்பெறும் என நோட்டோ அறிவித்துள்ளது. ரஷ்யாவின் அண்டை நாட்டு பிராந்தியங்களில் மேற்கத்திய நாடுகளின் ராணுவ கூட்டமைப்பான நோட்டோ விரிவாக்கப்படுவதை எதிர்த்து உக்ரைன் மீதான போரை 92வது நாளாக ரஷ்யா முன்னெடுத்து வருகிறது.
இந்தநிலையில் உக்ரைன் மீதான போர் நடவடிக்கைகள் தீவிரமடைந்ததை தொடர்ந்து, ரஷ்யாவின் மற்ற அண்டைநாடுகளான பின்லாந்து மற்றும் ஸ்விடன் அகிய நாடுகளும் தற்போது மேற்கத்திய நாடுகளின் ராணுவ கூட்டமைப்பில் இணைய விருப்பம் தெரிவித்து அதற்கான விண்ணப்பத்தையும் அளித்துள்ளனர்.
ஏற்கனேவே மேற்கத்திய நாடுகளின் ராணுவ கூட்டமைப்பான நோட்டோவில் உக்ரைன் இணைய விருப்பம் தெரிவித்து இருந்த நிலையில் தான் அந்த நாட்டின் மீது ரஷ்யா போர் நடவடிக்கையை தொடங்கியது ஆனால் தற்போது பின்லாந்து, மற்றும் ஸ்வீடன் நாடுகளும் ராணுவ கூட்டமைப்பில் இணைய விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்து இருப்பது ஐரோப்பிய பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில், ரஷ்யாவை சீண்டிப்பார்க்கும் விதமாக உக்ரைன், பின்லாந்து, ஸ்வீடன் மற்றும் ஜார்ஜியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய நோட்டோ பாதுகாப்பு அமைச்சர்களின் பேச்சுவார்த்தை கூட்டம் ஜூன் 15 மற்றும் 16ம் திகதிகளில் பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸ் நடைப்பெறும் என நோட்டோ அறிவித்துள்ளது.
ரஷ்யாவின் அண்டை நாடுகளை மேற்கத்திய ராணுவ கூட்டமைப்பிற்குள் இழுக்கும் நடவடிக்கைகளுக்கு ரஷ்யா தொடர்ந்து எச்சரிக்கைகள் தெரிவித்து கொண்டிருந்தும், நோட்டோ அமைப்பில் இல்லாத உறுப்பு நாடுகளுடன் இணைந்து நோட்டோ பாதுகாப்பு அமைச்சர்களின் பேச்சுவார்த்தை கூட்டத்தை நடத்த திட்டமிட்டு இருப்பது கிழக்கு ஐரோப்பிய பிராந்தியத்தில் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.