ஒரு அங்குல நிலத்தை கூட விட்டுத்தரக்கூடாது' - உக்ரைன் நாடாளுமன்றத்தில் போலந்து அதிபர்
24 May,2022
நாடாளுமன்றத்தில் பேசிய போலந்து அதிபர், உக்ரைன் ஒரு அங்குல நிலத்தைக் கூட விட்டு கொடுத்து விடக்கூடாது என வலியுறுத்தினார். கீவ், உக்ரைன் போரில் மரியுபோல் நகரம் முழுவதும் ரஷிய படைகளின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. அங்குள்ள அஜோவ் உருக்காலையை பாதுகாத்த உக்ரைன் படையினர் 2,500 பேர் ரஷிய படைகளிடம் சரண் அடைந்து விட்டனர். அவர்களில் ரஷிய தாக்குதலில் காயம் அடைந்தவர்கள் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டு, எஞ்சியவர்கள் ரஷிய கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள பகுதியில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த 2,500 பேர் கதி என்ன ஆகப்போகிறது என்பதில் நிச்சயமற்ற நிலை நீடிக்கிறது. அவர்களுக்கு கைதிகளுக்கான உரிமைகளை வழங்க வேண்டும், உக்ரைனுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று குடும்பத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர். அவர்கள் அனைவரையும் உக்ரைனுக்கு திரும்பக்கொண்டு வர போராடுவோம் என உக்ரைன் துணை பிரதமர் இரினா வெரேசுக் கூறினார். கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்தில் ரஷிய படைகள் தாக்குதல்களை நேற்று தீவிரப்படுத்தின. அங்கு நிலைமை மிகக்கடுமையாக உள்ளதாகவும், ஒவ்வொரு நாளும் உக்ரைன் படையினர் ரஷிய படையினரின் தாக்குதல் திட்டங்களில் இருந்து விலகி, அவற்றை சீர்குலைத்து வருவதாகவும் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கூறினார்.
கிழக்கு உக்ரைனில் டான்பாஸ் பிராந்தியத்திலும், தெற்கின் மைகோலெய்வ் நகரிலும் ரஷிய படைகள் வான்தாக்குதலையும், பீரங்கி தாக்குதலையும் நடத்தி வருகின்றன. இதில் உக்ரைன் படைகளின் கட்டளை மையங்கள், துருப்புகள், வெடிபொருள் கிடங்குகள் இலக்காக வைக்கப்படுகின்றன. ஏவுகணை தாக்குதலில் 3 கட்டளை மையங்கள், உக்ரைன் துருப்புகளும் தளவாடங்களும் குவிக்கப்பட்டுள்ள 13 பகுதிகள் சேதம் அடைந்துள்ளதாக ரஷிய ராணுவ செய்தி தொடர்பாளர் இகோர் கோனஷென்கோ தெரிவித்துள்ளார். மைக்கோலெய்வ் நகரில் ராக்கெட்டுகள் வீசப்பட்டன. இதில் மொபைல் டிரோன் தடுப்பு அமைப்பு பலத்த சேதம் அடைந்தது. உக்ரைனில் ராணுவ சட்டம் ஆகஸ்டு மாதம் வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. ரஷியாவிடம் நாட்டின் எந்தப் பகுதியையும் ஒப்படைப்பதுடன் தொடர்புடைய போர் நிறுத்தத்துக்கு சம்மதிக்க மாட்டோம் என்று உக்ரைன் அரசு அறிவித்துள்ளது. போலந்து நாட்டின் அதிபர் ஆண்ட்ர்செஜ் துடா உக்ரைன் சென்றுள்ளார். அவர் கீவ் நகரில் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசினார். உக்ரைன் நாடாளுமன்றத்திலும் அவர் உரை ஆற்றினார். அப்போது அவர் தனது எதிர்காலத்தை தீர்மானிக்கும் உரிமை உக்ரைனுக்கு மட்டுமே உண்டு என்று திட்டவட்டமாக தெரிவித்தார். அவர் தொடர்ந்து பேசுகையில், "ரஷிய அதிபருக்கு உக்ரைன் அடிபணிய வேண்டும் என்று கவலைக்குரல்கள் கூறுகின்றன. ஆனால் அந்த குரல்களுக்கு உக்ரைன் செவிசாய்க்கக்கூடாது. ஏனென்றால் உக்ரைனின் ஒரு அங்குல நிலத்தை விட்டுக்கொடுத்தாலும் அது ஒட்டுமொத்த மேற்கத்திய நாடுகளுக்கு விழுகிற அடியாக அமையும்" என குறிப்பிட்டார்.