உக்ரைனின் அசோவ்ஸ்டல் எஃகு ஆலையில் 265 உக்ரேனிய ராணுவ வீரர்கள் ரஷ்யாவிடம் சரணடைந்ததாக ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிப்ரவரி 24ம் திகதி முதல் உக்ரைன் மீது படையெடுத்து வரும் ரஷ்யா, கடந்த சில தினங்களாக போரில் கடும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்த கார்வ் நகரை உக்ரைன் படைகள் மீட்டுள்ளனர். மேலும், சுமி நகரில் எல்லை தாண்டி ஊடுருவ ரஷ்ய படைகள் மேற்கொண்ட முயற்சியை உக்ரைன் படைகள் முறியடித்துள்ளன.
எனினும், உக்ரைனின் முக்கிய துறைமுக நகரமான மரியுபோலை ரஷ்யா தொடர்ந்து தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
இந்நிலையில், மரியுபோலில் உள்ள அசோவ்ஸ்டல் எஃகு ஆலையில் 265 உக்ரேனிய ராணுவ வீரர்கள் ரஷ்யாவிடம் சரணடைந்ததாகவும், இதில் காயமடைந்த பலரும் அடங்குவர் என ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, நேற்று அசோவ்ஸ்டல் எஃகு ஆலையில் காயமடைந்த நிலையில் இருக்கும் உக்ரேனிய வீரர்கள் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் Novoazovsk-ல் உள்ள மருத்துவ மையங்களுக்கு அழைத்து செல்ல ஒப்புந்தம் ஏற்பட்டதாக ரஷ்யா பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்தது.
ரஷ்யாவின் அறிவிப்பை தொடர்ந்து அசோவ்ஸ்டல் எஃகு ஆலையிலிருந்து 10-க்கும் மேற்பட்ட பேருந்துகள் வீரர்களை ஏற்றிக்கொண்டு சென்றதாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
புடினுக்கு தடை விதிக்க திட்டமிடும் கனடா!
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உட்பட பலரை நாட்டிற்குள் நுழைய தடை விதிக்க கனடா திட்டமிட்டுள்ளது. உக்ரைன் ஆக்கிரமிப்பிற்குப் பிறகு ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகள் தொடர்ந்து விதிக்கப்பட்டுவரும் நிலையில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் அவரது அரசாங்க மற்றும் இராணுவத்தைச் சேர்ந்த 1,000 உறுப்பினர்கள் நாட்டிற்குள் நுழைவதைத் தடைசெய்யும் மசோதாவை கனடா செவ்வாயன்று செனட்டில் அறிமுகப்படுத்தியது.
உக்ரைனில் மரியுபோல் நகரத்தில் உள்ள அசோவ்ஸ்டல் எஃகு ஆலையை ரஷ்யா கைப்பற்றியதாகத் தெரியவந்த நிலையில், இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கனடாவின் பொது பாதுகாப்பு அமைச்சர் மார்கோ மென்டிசினோ வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், "இந்த தூண்டுதலற்ற ஆக்கிரமிப்புக்கு காரணமானவர்கள் உட்பட புடினின் ஆட்சியின் நெருங்கிய கூட்டாளிகள் மற்றும் முக்கிய ஆதரவாளர்கள் எங்கள் நாட்டிற்குள் நுழைவதைத் தடை செய்வது ரஷ்யாவை நாங்கள் குற்றங்களை பொறுப்பேற்க வைக்கும் பல வழிகளில் ஒன்றாக இருக்கும்" எனறு கூறியுள்ளார்.
உக்ரைன் போரின் தொடக்கத்திலிருந்து, கனடா மற்றும் பிற மேற்கத்திய நட்பு நாடுகளால் ரஷ்யாவிற்கு எதிராக பல தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. கனடாவும் உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்பி வருகிறது.
இதற்கு பதிலடியாக, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, நிதியமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் மற்றும் 600-க்கும் மேற்பட்ட கனேடியர்கள் தங்கள் நாட்டுக்குள் நுழைய ரஷ்யாவும் தடை விதித்துள்ளது.
இந்நிலையில், ரஷ்யாவின் நடவடிக்கைக்கு பழிக்கு பழி வாங்கும் விதமாக கனடாவின் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது