உக்ரைன் மீதான ரஷிய போர், உலகளவில் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த போர் தொடர்பாக இன்று இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகள் பின்வறுமாறு:-
மே 15, 06.00 a.m
யூரோவிஷன் பாடல் போட்டியில் உக்ரைன் வெற்றி பெற்றது.
உக்ரேனிய ராப் மற்றும் நாட்டுப்புற இசைக்குழு கலுஷ் ஆர்கெஸ்ட்ரா அவர்களின் "ஸ்டெபானியா" பாடலுடன் யூரோவிஷன் பாடல் போட்டியில் வென்றது.
2004 இல் பாடகர்களான ருஸ்லானா மற்றும் 2016 இல் ஜமாலா ஆகியோருக்குப் பிறகு உக்ரைன் யூரோவிஷனை வென்றது இது மூன்றாவது முறையாகும்.
மே 15, 05.16 a.m
நேற்று டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் ரஷிய குண்டுவீச்சு தாக்குதலில் 3 பொதுமக்கள் கொல்லப்பட்டனர், 4 பேர் காயமடைந்தனர்.
டோனெட்ஸ்க் ஒப்லாஸ்ட்டின் ஆளுநர் பாவ்லோ கிரிலென்கோ கூறுகையில், போஹோரோடிச்னில் இரண்டு பொதுமக்களும், கெராமிக்கில் ஒருவரும் கொல்லப்பட்டனர் என்று அவர் கூறினார். மேலும் லுஹான்ஸ்க் பகுதியில் காயமடைந்த இருவர் பாக்முட்டில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
மே 15, 04.48 a.m
இன்றுவரை 201 ரஷிய விமானங்கள் அழிக்கப்பட்டுள்ளன - உக்ரேனிய விமானப்படை தகவல்
உக்ரைனின் விமானப்படையின் செய்தித் தொடர்பாளர் யூரி இக்னாட் கூறுகையில், உக்ரைனின் விமானப்படை ரஷியாவின் ஒரு Su-30/Su-34 விமானம், ஏழு ஆளில்லா வான்வழி விமானங்கள், ஒரு படைப்பிரிவு தளம், ஒரு கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு நிலை மற்றும் 10 கவச வாகனங்களை அழித்ததாக அவர் தெரிவித்தார்.
இதன் விளைவாக கிட்டத்தட்ட 30 ரஷ்ய துருப்புக்கள் கொல்லப்பட்டதாக இக்னாட் கூறினார்.
மே 15, 04.05 a.m
உக்ரைனிடம் மாஸ்கோ "சரணடையாது" - ரஷிய தூதர்
இதுதொடர்பாக அமெரிக்காவுக்கான ரஷியாவின் தூதர் அனடோலி அன்டோனோவ் மேலும் கூறுகையில், “இரண்டு அணுசக்தி சக்திகளுக்கு மிகவும் எதிர்பாராத விளைவுகளுடன் அமெரிக்கா இந்த மோதல் முறையில் ஈடுபட்டுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.
மே 15, 03.41 a.m
நேட்டோ உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பிக்கும் திட்டத்தை பின்லாந்து பின்பற்றினால், ரஷியாவுடனான உறவு பாதிக்கப்படும் என்று, அந்நாட்டின் அதிபர் புதின் எச்சரித்துள்ளார். பின்லாந்து தனது பாரம்பரியமான ராணுவ நடுநிலை என்ற கொள்கையை கைவிட்டு விட்டதாகவும், இது அந்நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்றும் புதின் குறிப்பிட்டுள்ளார்.
மே 15, 02.29 a.m
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்தார். தலைநகர் கீவ்வில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது ரஷியா மீதான பொருளாதாரத் தடைகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கப் பட்டதாக ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.
ரஷியாவை பயங்கரவாத நாடாக, அமெரிக்கா, அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்க வேண்டும் என்று அப்போது அவர் வலியுறுத்தினார். அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களின் பயணம் உக்ரைன் மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு இடையிலான உறவின் வலிமையை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
மே 15, 01.10 a.m
உக்ரைனில் நடந்த போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கு ரஷியா பொறுப்பேற்க வேண்டும் என்று ஜெர்மனி வெளியுறவு மந்திரி அன்னலெனா பேர்பாக் தெரிவித்துள்ளார். சர்வதேச சட்டத்திற்கு எதிரான இந்தப் போருக்கு மட்டுமல்ல, அதனால் ஏற்பட்டுள்ள அனைத்து விளைவுகளுக்கும் ரஷியா மட்டுமே பொறுப்பு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மே 15, 12.25 a.m
உக்ரைன் பதிலடியை சமாளிக்க முடியாமல் கார்கிவ் நகரில் ரஷிய படைகள் பின்வாங்கின.
உக்ரைன் மீதான ரஷிய போரில், நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் நகரம் முக்கிய இடம் வகித்து வந்தது. நாட்டின் வட கிழக்கில் உள்ள இந்த நகரம், கோட்டை நகரம் என அழைக்கப்பட்டு வந்தது. போர் தொடங்கிய காலம்தொட்டு இந்த நகரை கைப்பற்றுவது ரஷிய படைகளின் முக்கிய நோக்கமாக இருந்தது.
2 மாதங்களுக்கு மேலாக முயற்சித்தும் அதில் அவர்கள் வெற்றி பெற முடியவில்லை. ரஷிய படைகள் கார்கிவ் நகரை கைப்பற்றும் முயற்சியை கைவிட்டு விடுவார்கள் என்று அமெரிக்காவைசேர்ந்த சிந்தனைக்குழு கணித்து இருந்தது. அது இப்போது உண்மையாகி இருக்கிறது.
உக்ரைன் படைகளின் எதிர்தாக்குதலை தாக்குப்பிடிக்க முடியாமல் கார்கிவ் நகரில் இருந்து ரஷிய படைகள் பின்வாங்கின. இந்த நகரில் கட்டிடங்களும், பொதுமக்களும் ரஷிய படைகளின் தாக்குதலுக்கு ஆளானாது மட்டும்தான் மிச்சம். ரஷிய படைகள் பின்வாங்கி விட்டதால் அந்த நகர மக்கள், அங்கு திரும்பி வரத்தொடங்கி விட்டனர்.
இதுபற்றி நகர மேயர் இஹோர் டெரகோவ் கூறியதாவது:-
கார்கிவ் போரில் நாங்கள் வெற்றிபெற்றிருக்கிறோம். கார்கிவ் நகரினுள் ரஷிய படையினர் இல்லை. ரஷிய டாங்குகளும், கவன வாகனங்களும் உக்ரைன் படைகளால் அழிக்கப்பட்டு விட்டன. கார்கிவ் பிராந்திய பாதுகாப்பு மற்றும் உக்ரைனிய ஆயுதப்படைகளின் முயற்சியால், ரஷிய படையினர் நகர எல்லையில் இருந்து வெகுதொலைவில், எல்லையை நோக்கி பின்வாங்கி விட்டனர்.
தற்போது நகரம் அமைதியாக இருக்கிறது. மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக நகரத்துக்கு திரும்பத்தொடங்கி உள்ளனர். உக்ரைன் போரில் இது ஒரு முக்கிய திருப்பம் ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.
இதையொட்டி கார்கிவ் பிராந்திய கவர்னர் ஓலெ சின்யெகுபோவ் கூறும்போது, “ரஷிய படைகள் பின்வாங்கி விட்டாலும் இன்னும் ஆபத்து உள்ளது. மக்கள் தங்கள் பாதுகாப்பை கருத்தில் கொள்ள வேண்டும். ரஷிய துருப்புகள் நகர பகுதியில் பெருமளவில் கண்ணிவெடிகளை புதைத்து வைத்துள்ளனர்” என தெரிவித்தார்.
இஜியம் நகரில் ரஷிய படைகளை எதிர்த்து உக்ரைன் படைகள் எதிர் தாக்குதல் நடத்துவதாக கார்கிவ் பிராந்திய ராணுவ நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுபற்றி சமூக ஊடகத்தில் வெளிட்ட பதிவில், ரஷிய படைகள் சில திசைகளில் பின்வாங்குகின்றன என கூறப்பட்டுள்ளது.
இந்த நகரை ரஷிய படைகள் கடந்த மாதம் 1-ந் தேதி கைப்பற்றின. இந்த நகரின் 80 சதவீத பகுதிகள் போரினால் அழிக்கபட்டுள்ளதாக நகர கவுன்சில் அதிகாரி மேக்சிம் ஸ்ட்ரெல்னிக் தெரிவித்துள்ளார். இந்த நகரில் இன்னும் 15 ஆயிரம் பேர் வரையில் இருப்பதாக நம்பப்படுகிறது.
கிழக்கு உக்ரைனைப் பொறுத்தமட்டில் டான்பாசில் ரஷிய தாக்குதல் தொடர்கிறது.
உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி, கடந்த ஒரு நாளில் 6 நகரங்கள் மற்றும் கிராமங்களை ரஷிய படைகளிடம் இருந்து உக்ரைன் படைகள் மீட்டெடுத்துள்ளன என தெரிவித்துள்ளார்.
மரியுபோல் நகரில் அஜோவ் உருக்காலையை இன்னும் ரஷிய படைகளால் வீழ்த்த முடியாத சூழல்தான் உள்ளது.
அஜோவ் பகுதி படையின் துணைத்தளபதி ஸ்வியாடோஸ்லாவ் இதுபற்றி கூறும்போது, “வெடிமருந்துகள், உணவு, தண்ணீர், மருந்து பற்றாக்குறை நிலவினாலும், தங்களால் முடிந்தவரை உக்ரைன் படை வீரர்கள் தாக்குபிடிப்பார்கள்” என தெரிவித்தார்.
இந்த போர் ஆகஸ்டு மத்தியில் ஒரு திருப்புமுனையை எட்டும், இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவு அடையும் என உக்ரைன் ராணுவ உளவுத்துறை தலைவர் கைரிலோ புடானோவ் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், “ரஷிய அதிபர் புதினை அகற்ற சதி நடக்கிறது. அவரும் புற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்” என குறிப்பிட்டார்.
இதற்கிடையே போருக்கு பின்னர் முதல் முறையாக ரஷிய ராணுவ மந்திரி செர்ஜி ஷோய்குவுடன் அமெரிக்க ராணுவ மந்திரி லாயிட் ஆஸ்டின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். உக்ரைனில் உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். இது குறித்த கூடுதல் தகவல்கள் வெளியாகவில்லை