எவரெஸ்ட் சிகரத்தில் கடல் மட்டத்திலிருந்து 8,830 மீட்டர் உயரத்தில் உலகின் மிக உயரமான தானியங்கி வானிலை நிலையத்தை (automatic weather station) சீன அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் நிறுவி உள்ளனர். புதிதாக நிறுவப்பட்டுள்ள இந்த ஆட்டோமேட்டிக் வெதர் ஸ்டேஷன் உலகின் மிக உயரமான சிகரத்தில் இருந்து வானிலை தரவுகளை சேகரிக்கவும், ஆய்வு செய்யவும் உதவும்.
சோலார் பேனல்கள் மூலம் இயக்கப்படும் இந்த ஆட்டோமேட்டிக் வெதர் ஸ்டேஷன் மிக கடுமையான வானிலை மாற்றங்களின் கீழ் கூட 2 ஆண்டுகள் வரை நீடித்து செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் தரவு பரிமாற்றத்திற்கான (data transmission) செயற்கைக்கோள் தகவல் தொடர்பு அமைப்புடன் பொருத்தப்பட்டு உள்ளது. எவரெஸ்ட் சிகரம் அமைந்துள்ள கிங்காய்-திபெத் பீடபூமி, உலகின் கூரை, ஆசியாவின் நீர் கோபுரம் மற்றும் பூமியின் மூன்றாவது துருவம் என்று அழைக்கப்படுகிறது.
சீனா-நேபாள எல்லையில் உள்ள உலகின் மிக உயரமான மலையின் உச்சியில் பனி மற்றும் பனி கட்டியின் தடிமனை அளவிட இந்த வானிலை நிலையம் ஒரு உயர் துல்லி ரேடாரைப் பயன்படுத்துகிறது. இந்த வானிலை நிலையம் நிறுவப்பட்டு உள்ளதன் மூலம் பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் செய்த முந்தைய உலக சாதனையான எவரெஸ்டின் தெற்குப் பகுதியில் 8,430 மீட்டர் உயரத்தில் நிறுவப்பட்ட வானிலை நிலையத்தின் சாதனையை, சீனாவின் இந்த புதிய வானிலை நிலையம் முறியடித்து உள்ளது.
13 உறுப்பினர்கள் கடந்த மே 4ம் தேதி அதிகாலை 3 மணிக்கு 8,300 மீட்டர் உயரத்தில் தங்கள் முகாமில் இருந்து வெளியேறி, வானிலை நிலையத்தை அமைக்க வேண்டிய 8,830 மீட்டர் உயரத்தை அடைந்து, மதியம் 12:46 மணியளவில் இந்த சாதனை வானிலை நிலையத்தை நிறுவியதாக சீனா சென்ட்ரல் டெலிவிஷன் தகவல் வெளியிட்டு உள்ளது.
மலையின் வடக்கு பகுதியில் 7,028 மீட்டர், 7,790 மீட்டர் மற்றும் 8,300 மீட்டர் உயரத்தில் மூன்று வானிலை ஆய்வு மையங்களை ஏற்கனவே நிறுவி உள்ளது. CGTN-ன் கூற்றுப்படி, இப்போது மொத்தம் 5,200 மீட்டர் முதல் 8,300 மீட்டர் வரை இயங்கும் 7 வானிலை நிலையங்கள் உள்ளன. இந்த நிலையங்கள், காற்றின் வேகம், காற்றின் திசைத் தரவு மற்றும் மலையின் வடக்குப் பகுதியில் உள்ள ஈரப்பதம் ஆகியவற்றைச் சேகரிக்கும். இந்த நிலையத்தை அமைப்பதற்குத் தேவையான உபகரணங்கள் சுமார் 50 கிலோகிராம் எடையுள்ளதாகவும், உச்சிக்கு எடுத்து செல்ல ஏதுவாக அவை டிஸ்ட்மேண்டில் செய்யப்பட்டு பின் அசெம்பிள் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பூமியின் மிக உயரத்தில் காணப்படும் பனிக்குள் என்ன இருக்கிறது என்பதை அறிய விரும்புகிறோம் என சீன திபெத்திய பீடபூமி ஆராய்ச்சி நிறுவனத்தின் (ITP), சீன அறிவியல் அகாடமியின் ஆராய்ச்சியாளர் வூ ஜியாங்குவாங் (Wu Jianguang) கூறி இருக்கிறார். புதிதாக நிறுவப்பட்டு இருக்கும் இந்த வானிலை நிலையம் உலகின் மிக உயரமான சிகரத்திலிருந்து வானிலை தரவுகளை சேகரித்து ஆய்வு செய்ய உதவும், இது பனிப்பாறைகளின் நிலைமைகள் பற்றிய முக்கியமான நுண்ணறிவுகளை வழங்கும் என்றும் குறிப்பிட்டு உள்ளார்.