உள்நாட்டில் வெறுப்புணர்வு அதிகரிப்பு: 10 லட்சம் அகதிகளை மீண்டும் சிரியாவுக்கே அனுப்ப துருக்கி திட்டம்
09 May,2022
சிரியாவில் 2011 ஆம் ஆண்டு முதல் ஐஎஸ் பயங்கரவாத எழுச்சி மற்றும் அரசுக்கு எதிரான கிளர்ச்சிப்படைகளின் ஆதிக்கம் அதிகரித்தது. இதனால், சிரியாவில் உள்நாட்டு போர் ஏற்பட்டது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையில், சிரியாவில் உள்நாட்டு போர் தொடங்கியதில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சமடைந்தனர். குறிப்பாக, சிரியாவின் அண்டை நாடான துருக்கியில் அதிக அளவில் மக்கள் அகதிகளாக தஞ்சமடைந்தனர்.
அந்த வகையில் துருக்கியில் சிரியாவை சேர்ந்த மொத்தம் 37 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அகதிகளாக வசித்து வருகின்றனர். அதேவேளை, துருக்கி பொருளாதாரம், கலாச்சாரம், பண்பாடு, மொழி, பழக்கவழக்கம் என அனைத்தையும் சிரியாவில் இருந்து வந்த அகதிகள் ஆக்கிரமித்து அழித்து வருவதாக துருக்கியில் எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. மேலும், துருக்கி மக்களிடையே சிரிய அகதிகள் மீதான வெறுப்புணர்வும் அதிகரித்து வருகிறது. அகதிகள் மீதான தாக்குதல்களும் துருக்கியில் அதிகரித்து வருகிறது.
இதனை தொடர்ந்து தங்கள் நாட்டில் உள்ள உள்ள அகதிகளை மீண்டும் சிரியாவுக்கே அனுப்பும் நடவடிக்கையை துருக்கி அதிபர் எர்டோகன் தலைமையிலான அரசு தீவிரப்படுத்தியுள்ளது. ஏற்கனவே 5 லட்சம் அகதிகள் சிரியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக துருக்கி அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், துருக்கியில் உள்ள மேலும் 10 லட்சம் சிரிய அகதிகளை விரைவில் அவர்களின் சொந்த நாடான சிரியாவிற்கே அனுப்ப தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக துருக்கி அதிபர் எர்டோகன் இன்று அறிவித்துள்ளார்.