உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்த வடகொரியா!
01 May,2022
வடகொரியாவுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அணு ஆயுதங்களை முன்கூட்டியே பயன்படுத்துவோம் என வடகொரியா தலைவர் கிம் ஜோங் உன் மிரட்டல் விடுத்துள்ளார். வடகொரியா ராணுவம் நிறுவப்பட்டதின் 90-வது ஆண்டு தினத்தையொட்டி கடந்த 25-ம் திகதி தலைநகர் பியாங்யாங்கில் பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு முன்னெடுக்கப்பட்டது. குறித்த அணிவகுப்பை நேரில் பார்வையிட்ட பின்னர் ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றிய கிம் ஜோங் உன், வடகொரியா தனது அணு ஆயுத திறனை அதிகவேகத்தில் மேம்படுத்தும் என சூளுரைத்தார்.
மட்டுமின்றி, நாட்டுக்கு ஒரு அச்சுறுத்தல் என்றால், அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்தவும் அஞ்ச மாட்டோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ராணுவ அணிவகுப்பை சிறப்பாக நடத்தியதற்காக மூத்த ராணுவ அதிகாரிகளை கிம் ஜோங் உன் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்த நிலையிலேயே குறித்த கருத்தை தெரிவித்துள்ளார்.
மேலும், விரோத சக்திகளிடமிருந்து அதிகரித்து வரும் அணுஆயுத அச்சுறுத்தல்கள் உள்பட, அனைத்து ஆபத்தான முயற்சிகளையும், அச்சுறுத்தும் நகர்வுகளையும் முழுமையாக கட்டுப்படுத்தி, தோல்வியடைய செய்ய வடகொரியா தயங்காது என்றார்.
வட கொரியா மீதான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா நீக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டாலும், அமெரிக்காவின் நிபந்தனைகளை ஏற்க கிம் ஜோங் நிர்வாகம் மறுத்து வருகிறது.
இதனாலையே, 2019ல் அமெரிக்கா உடனான முக்கிய பேச்சுவார்த்தை முடங்கியது. இருப்பினும் பைடன் நிர்வாகம் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்கலாம் என்ற கட்டத்தில், உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்கா கவனம் செலுத்தி வருகிறது.