உக்ரைன் எரிபொருள் கிடங்கில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்..!
05 Apr,2022
உக்ரைனின் கார்கீவ் நகரில் ரஷ்யா நடத்திய தாக்குதலில், பொதுமக்கள் 7 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைனின் ஒடெசா பகுதியில் உள்ள எரிபொருள் கிடங்கின் மீது ரஷ்யா பெரும் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. கருங்கடல் அருகேயுள்ள ஒடெசா நகரத்தை குறிவைத்து ரஷ்யா நடத்திய இந்தத் தாக்குதலால், அப்பகுதியே கரும்புகை சூழ்ந்து காணப்பட்டது. இந்தத் தாக்குதலால் உக்ரைன் ராணுவத்தினருக்கு எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
கார்கீவ் மற்றும் ஸ்லோபோடா மாவட்டங்களில் உள்ள, குடியிருப்பு கட்டடங்கள் மீது உள்ளூர் நேரப்படி நேற்று மாலை 6 மணியளவில் ரஷ்ய படையினர் தாகுதல் நடத்தியுள்ளனர். இதில் பத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளிட்ட கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. 7 பேர் உயிரிழக்க, 3 குழந்தைகள் உட்பட 34 பேர் காயமடைந்துள்ளனர். இதனிடையே, புச்சா உள்ளிட்ட நகரங்களில் ரஷ்ய படைகள் இனப்படுகொலை நடத்தி வருவதகாவும், அதில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்து உள்ளதாகவும், உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார். ரஷ்யாவிற்கு எதிராக பொருளாதார தடைகள் விதிக்கப்படுவது போதாது எனவும் கூறினார்.
உக்ரைனை தற்காத்துக் கொள்ள உலக வல்லரசுகளிடம் ஆயுதங்களைக் கேட்க வேண்டிய அவசியமில்லை எனவும், தங்களுக்கு அந்த ஆயுதங்கள் வழங்கப்பட வேண்டும் எனவும் செலன்ஸ்கி பேசியுள்ளார். அதேசமயம், புச்சா நகரில் பொதுமக்கள் யாரையும் தங்களது படையினர் கொல்லவில்லை என, ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.