ரஷிய எண்ணெய் கிடங்கு மீது தாக்குதல்- உக்ரைன் மீது குற்றம்சாட்டும் ஆளுநர்
01 Apr,2022
உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் 37வது நாளாக நீடிக்கிறது. பல்வேறு பகுதிகளை கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ள ரஷியா, இப்போது உக்ரைன் தலைநகர் கீவை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷியாவின் வான் தாக்குதல் காரணமாக உக்ரைன் நகரங்களில் உட்கட்டமைப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. உக்ரைன் படைகளும் சளைக்காமல் ரஷியாவுக்கு பதிலடி கொடுத்தவண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், உக்ரைன் எல்லையை ஒட்டிய ரஷிய பகுதியில் உள்ள எண்ணெய் கிடங்கு மீது இன்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் எண்ணெய் கிடங்கு கொளுந்து விட்டு எரிகிறது. எண்ணெய் சேமிப்பு கிடங்கில் பணியாற்றிய ஊழியர்களில் இருவர் உக்ரைனின் தாக்குதல் காயம் அடைந்துள்ளனர். அப்பகுதியை சுற்றி வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். தீயணைப்பு பணியாளர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
ரஷியாவின் மேற்கு நகரமான பெல்கோரோட் நகரத்தில் உள்ள அந்த எண்ணெய் கிடங்கு மீது, உக்ரைனின் இரண்டு ராணுவ ஹெலிகாப்டர்கள் தாழ்வாக பறந்து வந்து தாக்குதல் நடத்தியிருப்பதாக பிராந்திய ஆளுநர் கூறி உள்ளார். ரஷிய எண்ணெய் கிடங்கை தாக்கியது உக்ரைன் தான் என ரஷிய ஊடகத்திலும் செய்தி வெளியாகி உள்ளது. ஆனால், இதுவரை உக்ரைன் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை. எனினும், அது உண்மையாக இருந்தால், படையெடுப்பு தொடங்கியபிறகு ரஷிய மண்ணில் உக்ரைன் நடத்திய முதல் தாக்குதலாக இருக்கும்.
இதேபோல் ஒரு வாரத்திற்கு முன்பு, பெல்கோரோட் மீது உக்ரைன் பீரங்கி குண்டுகளை வீசியதாக ஆளுநர் குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.